பண்டாரவளை மீரியாபெத்தயில் மண்சரிவு ஏற்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தும் அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காமல் அசமந்தப் போக்கைக் கடைப்பிடித்த அதிகாரிகள் தொடர்பில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையையும் எடுக்காதது கவலையளிக்கின்றது என மலையக சமூக ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அவ் அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவிக்கையில், மீரியாபெத்தயில் மண்சரிவு ஏற்பட்டு இன்றோடு நான்கு வருடங்களாகின்றன. மலையகத்தில் மண்சரிவு அபாயம் ஏற்படும் என இனங்காணப்பட்டுள்ள 1000 க்கும் அதிகமான இடங்களில் மீரியாபெத்தயும் ஒன்றாகும். இவ்வாறு அடையாளங்காணப்பட்ட பின்னரும் மக்கள் அங்கேயே வாழ்ந்துவந்துள்ளனர். இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது. அனர்த்தம் நிகழும் எனத் தெரிந்தும் அரச அதிகாரிகள் எவ்வித மாற்று நடவடிக்கைகளையும் ஏற்படுத்திக்கொடுத்திருக்கவில்லை. இவ்வாறான அரச அதிகாரிகளின் கடமை தவறிய செயலுக்கு அரசாங்கம் இன்றுவரை பதிலளித்திருக்கவில்லை. இதன் மூலம் மலையக மக்கள் மீதான அரசாங்கத்தின் பார்வை எவ்வாறு காணப்படுகின்றது என்பது வெட்ட வெளிச்சமாகிறது. மலையக மக்கள் தமது வாழ்வியலில் முகங்கொடுக்கின்ற இயற்கை அனர்த்தங்கள், போராட்டங்கள் அதனால் அவர்கள் சந்திக்கின்ற துன்பங்கள், இழப்புக்கள் எல்லாம் மிகவும் வேதனைக்குரியவை.
இந்த மீரியாபெத்த அனர்த்தம் ஏற்பட்ட பின்னர் தமக்கு சொந்தக் காணிவேண்டும் என்று மலையகத்தில் போராட்டங்கள் வெடித்தன.
தமக்கு சுயபொருளாதாரம், கௌரவம் தொடர்பில் சமநீதி வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது. அதற்கென வழங்கப்படும் ஏழு பேர்ச்சஸ் வீட்டுக்காணியை அவர்கள் கோரிக்கையாக முன்வைக்கவில்லை. விவசாயக்காணிகள் இருந்தால் மட்டுமே அவர்களும் இந்நாட்டின் பிரஜைகளாக கௌரவமாக வாழமுடியும். அத்தகையதோர் அரசியல் இருப்பை நோக்கிய இம்மக்களுடைய பயணமே இவ் உயிர்த்தியாகத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு வீடுகள், உதவித் தொகைகள் நிவாரணமாக வழங்கினாலும் அவ்வனர்த்தத்தால் உயிரிழந்தோருக்கு அவ்வீடுகள் நிவாரணமாக அமையாது என்றார்.