மைத்திரி – மஹிந்த தரப்புகள் இணையுமா? நிரந்தரமாகப் பிரியுமா? என்பது தொடர்பாக எதிர்வரும் 3 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்திலேயே தெரியவரும் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. உள்ளூராட்சித் தேர்தல்கள் உட்பட சில முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களது கூட்டம் எதிர்வரும் 3 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. . இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி அரசில் அங்கம் வகிக்கும் ஸ்ரீல.சு.கட்சி அமைச்சர்களுக்குப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீல.சு. கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடந்த 24 ஆம் திகதி அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என ஸ்ரீல.சு.க பொதுச்செயலாளர் அமைச்சர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.
இதேவேளை, இக்கூட்டத்தில் கலந்துகொள்ளாத ஸ்ரீல.சு.கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை,ஒன்றிணைந்த எதிர்க்கட்சி, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ‘தாமரை மொட்டு’ சின்னத்தில் இந்த உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடத் தீர்மானித்துள்ளது. இந்த நிலையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இக் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இது இவ்வாறிருக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து கொண்டு மற்றுமொரு கட்சியின் வெற்றிக்காக செயற்பட முடியாது. எதிர் வரும் அனைத்து தேர்தல்களிலும் கட்சியின் வெற்றிகாக அனைத்து உறுப்பினர்களும் செயற்பட வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் கட்சியை விட்டு நீக்கும் வகையிலான சிவப்பு எச்சரிக்கையை கூட்டு எதிர்க் கட்சியில் செயற்படும் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினருக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீல.சு.கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
அனைத்து உள்ளூராட்சிமன்றங்களுக்குமான தேர்தலை ஜனவரி மாதத்தில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாளை மறுநாள் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட உள்ள நிலையில் , அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராகிவருகின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை எதிர்கொள்வது குறித்து பல்வேறு மட்டங்களில் தயார்ப்படுத்தல்களில் ஈடுப்பட்டுள்ளது. குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க் கட்சியில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் தீர்க்கமான தீர்மானங்களை எடுப்பது குறித்து ஆராய்வதற்கு மேற்படி சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூட உள்ளது.
மேலும் கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் கட்சியின் வெற்றிக்காக செயற்பட வேண்டும். இது குறித்து எடுக்கப்படும் மத்திய செயற்குழுவின் தீர்மானத்தை மீறும் பட்சத்தில் பதவி, தராதரம் பாராது கட்சியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானங்கள் கட்சியின் உயர் மட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளனஎன்றும் குறித்த கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் கூறினார் .
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உறுப்பினராக இருந்து கொண்டு மற்றுமொரு கட்சியின் வெற்றிக்காக செயற்படுவதை அனுமதிக்க முடியாது என்பதே தற்போதைய நிலைப்பாடாக உள்ளது. இதனடிப்படையில் இவ்வாரம் நடைபெறும் சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானம் அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் கூறினார் .