பிரிட்டனில் ஆண்டுக்கு இரண்டு முறை கடிகார நேரத்தில் மாற்றம் செய்யப்படும்.
வசந்த காலத்தில் ஒரு மணி நேரம் முன்னோக்கியும், இலையுதிர் காலத்தில் ஒரு மணி நேரம் பின்னோக்கியும் கடிகாரத்தில் நேர மாற்றம் செய்யப்படும். வசந்தகாலம் ஆரம்பிக்கும் மார்ச் மாதத்தின் கடைசி ஞாயிறு நேர மாற்றம் மேற்கொள்ளப்படும். இலையுதிர் காலமான அக்டோபர் மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரம் பின்னோக்கி மாற்றப்படும்.
கடந்த 1916 ஆம் ஆண்டு கோடைகால சட்டம் நிறைவேற்றப்பட்ட போது, கடிகாரத்தில் நேரத்தை மாற்றம் செய்வதில் மக்களுக்கு விளக்கம் அளிக்கப்படவில்லை.
அதன்பின்னர் கடந்த 1941-ஆம் ஆண்டு பிரிட்டன் நேரத்தில் மற்றுமொரு மாற்றம் செய்யப்பட்டது. அதாவது கிரீன்விச் இடைநிலை நேரம் (GMT) நேரத்திலிருந்து கடிகாரம் இரண்டு மணி நேரம் முன்னோக்கி மாற்றப்பட்டது. இதன் மூலம் எரிசக்தியை சேமிக்கலாம் என்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக இருந்தது.
ஆனால், 1947 ஆம் ஆண்டு இரண்டு மணி நேரம் பின்னோக்கி மாற்றப்பட்டது.
இதேபோன்றதொரு முயற்சி 1968-ஆம் ஆண்டு முயற்சி செய்யப்பட்டு கடிகாரம் ஒரு மணி நேரம் முன்நோக்கி மாற்றப்பட்டு, 1971-ஆம் ஆண்டு வரை அதில் எந்த மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. அதன் பின்னர் ஆண்டுக்கு இரண்டு தடவைகள் நேரத்தை மாற்றும் நடைமுறை கொண்டுவரப்பட்டது. அதன்படி இந்த மாதம் கடைசி ஞாயிறு அன்று (நாளை) நேர மாற்றம் செய்யப்பட உள்ளது.
பிரிட்டனின் நேர மாற்ற நடைமுறை அறிமுகமாகி கடந்த ஆண்டு மார்ச் மாதம் 100 வருடங்கள் பூர்த்தியானது என்பது குறிப்பிடத்தக்கது.