பிரபாவின் கண்கட்டிவித்தை! : தேடியவர்களும் – தேடப்பட்டவரும்!

pirapakaran-1-680x365பிரபாவுக்கு நிபந்தனை

புலிகள் வன்னிக் காட்டுக்குள் இருந்தபோது சுவையான போட்டிகளும் அவர்களுக்குள் நடப்பதுண்டு.

எந்த மாதிரியான சூழ்நிலையிலும் இயக்கத்தின் கட்டுப்பாடு, போர்க்குணம் என்பவற்றை தளராமல் வைத்திருப்பவர் பிரபாகரன். அதே வேளையில் இயக்க உறுப்பினர்களுடன் கலகலப்பாகவும் நடந்து கொள்வார்.

தமிழ்நாட்டிலிருந்து படகுமூலம் வன்னிக்குச் சென்று பிரபாகரனைச் சந்தித்தார் தமிழ்நாட்டுத் தமிழர் குளத்தூர்மணி.

தமிழ்நாட்டில் தனது சொந்த நிலத்தை புலிகள் இயக்கத்தினர் பயிற்சி முகாம் அமைக்க கொடுத்து உதவியவர் அவர்.

இந்தியப் படையின் சுற்றிவளைப்பில் வன்னிக்காட்டில் இருந்த பிரபாகரனை எப்படியாவது சந்தித்துவிடும் ஆவலில் வன்னிக்காட்டுக்குப் போய்ச் சேர்ந்தார் குளத்தூர்மணி.

அங்கு நேரில் கண்ட காட்சி ஒன்றை பின்னர் விபரித்தார் மணி.

kulathuurmaniகுளத்தூர் மணி

ஓரிடத்தில் கைப்பற்றப்பட்ட முப்பது வகையான துப்பாக்கிக் குண்டுகள் ஒரே இடத்தில் வைக்கப்பட்டன.

“இந்தக் குண்டுகள் ஒவ்வொன்றும் எந்தெந்த துப்பாக்கிக்குச் சொந்தமானவை என்பதை பார்த்த உடனேயே தெரிவிக்க வேண்டும்” என்று கூறினார் பிரபாகரன்.

கூடியிருந்த புலிகள் மகிழ்ச்சியுடன் சம்மதித்தனர். தானும் இப்போட்டியில் கலந்து கொள்ளப் போவதாகப் பிரபாகரன் தெரிவித்தார். உடனே மற்றவர்கள் அவருக்கு ஒரு நிபந்தனை விதித்தனர்.

அவர் கலந்துகொள்வதானால் கண்களைக் கட்டிக்கொண்டு, கையால் தொட்டுப்பார்த்துத்தான் கூற வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். பிரபாகரனும் அதற்குச் சம்மதித்தார்.

பலவகையான குண்டுகள் அங்கு பரப்பி வைக்கப்பட்டன. தனது கண்களைத் துணியால் கட்டிக்கொண்டார் பிரபாகரன்.

கையால் ஒவ்வொரு குண்டையும் தொட்டுப்பார்த்து, அது எந்தத்துப்பாக்கிக்குரியது என்பதை இம்மியளவும் பிசகாமல் சரியாகக் கூறினார் பிரபாகரன்.

எல்லோரும் கைதட்டிப் பாராட்டினார்கள். பின்னர் பிரபாகரன் குளத்தூர் மணியிடம் கூறினாராம்,

“அண்ணா என் நிலையைப் பார்த்தீர்களா? எனக்கே நிபந்தனை விதித்துச் சோதிக்கிறார்கள்.”

தமிழக ஆதரவாளர்கள்

இந்த இடத்தில் சில விடயங்களைக் குறிப்பிட்டாக வேண்டும்.

1986 வரை சகல இயக்கங்களுக்கும் தமிழ்நாட்டில் சிறந்த ஆதரவாளர்கள் இருந்தனர். இயக்க உறுப்பினர்களை தங்கள் சொந்தப் பிள்ளைகளாக, சொந்த சகோதரர்களாக நேசித்தனர்.

பின்னர் ஏனைய இயக்கங்கள் ஈழக் கோரிக்கையை கைவிட்டபின்னர் தீவிரமான ஆதரவாளர்கள் பலர் அந்த இயக்கங்களில் நம்பிக்கை இழந்தனர்.

தமிழ்நாட்டில் ஈழஇயக்கங்களுக்கு ஆதரவு தெரிவித்தவர்களில் இருவிதமான தன்மைகொண்டோர் இருந்தனர்.

முதல் வகையினர் எந்தக் கைமாறும் கருதாமல் தமிழ் இன உணர்வுடன் அரணைத்தவர்கள்.

இரண்டாவது வகையினர் தமிழ்நாட்டில் தமது அரசியல் நோக்கத்தை சார்ந்து நின்று ஆதரவு தெரிவித்தவர்கள்.

வை.கோபாலசாமிஆயினும் முக்கிய அரசியல் கட்சிகளுக்குள்ளும் ஈழத்தமிழர் பிரச்சினையில் தன்னலம் இன்றி செயற்பட்டவர்களும் இருக்கிறார்கள். அன்று தி.மு.க.வில் இருந்த இன்றைய ம.தி.மு.க. தலைவர் வை. கோபாலசாமியை அதற்கு உதாரணம் சொல்லலாம்.

இதிலே புலிகளின் தனித்துவம்என்னவென்றால் தங்களுக்கு ஆதரவளிப்பவர்கள் பற்றிய குணாம்சங்கள் தொடர்பாக தெளிவாக இருந்ததுதான்.

தமிழக முதல்வர் அமரர் எம்.ஜி.ஆர். பிரபாகரன் மீது பேரண்பு கொண்டு மாபெரும் உதவிகளைச் செய்தார்.

mgr-prapakaranஎம்.ஜி.ஆருக்கு மதிப்புக் கொடுத்தாலும் கூட நீண்டகால நோக்கில் தம்மோடு தமிழ்நாட்டில் ஒத்துழைக்கக்கூடிய சக்திகளையும் புலிகள் இனம்கண்டு உறவுகளை வைத்திருந்தனர்.

இந்தியப் படைக்காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு ஆதவாக கலைஞர் கருணாநிதி முன்னின்று குரல் கொடுத்தார்.

கலைஞரது ஆதரவை மிகச் சரியான நேரத்தில் பெற்றுக்கொண்ட புலிகள், அதன் வரையறையையும் உணர்ந்தே இருந்தனர். அதனால்தான் தமிழகத்தில் உள்ள இன உணர்வுக்குழுக்களுடன் பலமான உறவினைக் கொண்டிருந்தனர்.

சென்னையில் இருந்த புலிகள் இயக்க அலுவலகத்திற்கு பொறுப்பாக இருந்தவர் காஸ்ட்ரோ. திலீபனின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிக்க ஈ.பி.டி.பி சார்பாகச் சென்ற ரமேஷ் நடராஜா, மு. சந்திரகுமார் இருவரிடமும் காஸ்ட்ரோ சொன்னது இது:

“தமிழகத்தில் உள்ள அரவியல்வாதிகள் எஙகளை; பயன்படுத்த நினைப்பது எங்களுக்குத் தெரியும். இவர்கள் தங்கள் நலன் நாளை பாதிக்கப்பட்டால் எங்களைக் கைவிடவும் கூடும்தான். ஆனால் உண்மையாகவே இன உணர்வு உள்ளவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அவர்களை நாம் நம்புகிறோம்.!”

இதனை இந்தக் கட்டத்தில் குறிப்பிடக் காரணம் இருக்கிறது.

புலிகளின் கணிப்புச் சரி என்பதை காலம் உணர்த்தியிருக்கிறது. இப்போது 06.06.97 அன்று தமிழ்நாட்டில் ஈழத்தமிழருக்கு ஆதரவாக கறுப்பு நாள் அனுஷ்டிக்க தமிழகத்தின் பலகட்சிகள் முன்வந்துள்ளன அல்லவா.

இந்த முயற்சி முக்கிய கட்சிகள் முன்வந்து செய்த முயற்சி அல்ல. ஈழத்தமிழருக்கு ஆதரவு தெரிவிப்பது புலிகளுக்கு ஆதரவான நிலையாகக் கருதி தங்கள் நலனுக்கு பாதகம் வந்துவிடுமோ என்று சில முக்கிய கட்சிகள் தயங்கின.

அவ்வாறான சூழ்நிலையிலும் தமிழ்நாட்டில் சிறு குழுக்களாக உள்ள இன உணர்வுச் சக்திகள் விடாது மேற்கொண்ட முயற்சியின் விளைவே இதுவாகும்.

மணியோசை வேண்டாம்

இந்தியப் படையினருக்கு புலிகள் தொடர்பான இரகசியத் தகவல் கொடுக்க ஆட்கள் இருந்தனர்.

தகவல் கிடைத்து குறிப்பிட்ட இடத்திற்கு இந்தியப் படையினர் சென்றால் அங்கிருந்து புலிகள் அப்போதுதான் வெளியேறிய தடயங்கள் இருக்கும்.

தாங்கள் வருவதை புலிகள் எப்படி அறிகிறார்கள் என்று பல வழிகளிலும் ஆராய்ந்து கொண்டிருந்தனர் இந்தியப் படையினர்.

அந்த ஆராய்ச்சியில் அவர்கள் கண்டு பிடித்ததில் ஒன்று கோவில் மணியோசை.

“இந்தியப் படைவருவதாக தெரிந்தால் குறிப்பிட்ட பகுதியில் உள்ள கோவிலில் உள்ள மணியை அடித்து ஓசை எழுப்ப ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் வயதான பெண்களாகவோ, ஆண்களாகவோ இருப்பர்.”

அவர்கள் மணியடிப்பது சந்தேகத்தை ஏற்படுத்தாது. பூசைக்காகவோ அல்லது நேரப்படியோ மணி அடிப்பதாக படையினர் நினைப்பர்.

ஆனால் அதுதான் புலிகளுக்கு எச்சரிக்கை மணி. அந்த ஓசை கேட்டதும் புலிகள் தமது மறைவிடத்தில் இருந்து தப்பிச் சென்று விடுவர்.

இதனைக் கண்டுபிடித்த இந்தியப் படையினர் சில பகுதிகளில் அங்குள்ள கோயில்களில் மணி அடிப்பதையே தடைசெய்திருந்தனர்.

மாலை ஆறுமணியுடன் கோவில்களைப் பூட்டிவிடவேண்டும் என்றும் சில பகுதிகளில் உத்தரவு போடப்பட்டிருந்தது.

புலிகளும் கோவில்களிலும், மண்டபங்களிலும் இரவில் தங்கினார்கள். சிறு சிறு குழுக்களாகவே நடமாடினார்கள்.

தனிநபர்களாக நடமாடி இந்தியப் படையினருக்குத் தகவல் கொடுப்போரையும், இந்தியப் படையுடன் இணைந்து செயற்படும் இயக்க உறுப்பினர்களையும் தீர்த்துக்கட்டுவதிலும் ஈடுபட்டனர்.

திண்டாட்டம்

பாடசாலை மாணவ, மாணவிகள் போலவும், மற்றும் பல்வேறு ரூபங்களிலும் புலிகள் நடமாடியதால் இந்தியப் படையினர் புலிகளை இனம் காணமுடியாமல் திண்டாடினார்கள்.

கட்டுமஸ்தான உடல் கொண்ட ஆண்களையோ, பார்வைக்குத் துடிதுடிப்பாகத் தெரியும் பெண்களையோ கண்டால் இந்தியப் படையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுவிடும்.

அதனால் திடகாத்திரமான தேகம் உடைய ஆண்;கள் உள்ள குடும்பத்தினருக்கு தினமும் நடுக்கம்தான்.

புலிகள் என்றால் பலசாலிகளாக பார்வைக்கு முரட்டுத்தனமாக இருப்பார்கள் என்பதுதான் இந்தியப் படையினரின் கணிப்பு.

அந்தக் கணிப்பால்தான் இந்தியப் படையினரின் கண்களில் புலிகளும் சுலபமாக மண்ணைத்தூவிக் கொண்டிருந்தனர்.

பார்வைக்கு அப்பாவிகள் போலவும், சிறு வயது உடையவர்களாகவும் தோன்றும் உறுப்பினர்கள் இந்தியப் படையின் ‘சென்றிப் பொயிண்டுக்களை’ தாண்டிப்போய் தங்கள் காரியத்தை முடித்துக் கொண்டனர்.

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் புலிகள் இயக்க உறுப்பினராக இருந்தவர் தும்பன்.

பண்டத்தரிப்பில் மட்டுமல்லாமல் வட்டுக்கோட்டை மானிப்பாய் தொகுதிகளில் யார் கைது செய்யப்பட்டாலும் இந்தியப் படையினர் முதலில் கேட்கும் கேள்வி: “தும்பனைக் கண்டீர்களா?” என்பதுதான்.

பண்டத்தரிப்புச் சந்தியில் நின்றனர் இந்தியப் படையினர். விழிப்பாகத்தான் இருந்தனர். அங்குள்ள நகைக்கடையொன்றில் நகை வாங்கச் சென்றார் ஒரு படைவீரர்.

அவர் அருகில் வந்த ஒரு மெல்லிய உடல்வாகு கொண்ட இளைஞன் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தன் இடுப்பில் இருந்த பிஸ்டலை உருவினான், சுட்டான்.

யயயளயயபடைவீரர் பலியானார். தும்பன் ஓடி மறைந்துவிட்டான்.

அதன்பின்னர் இந்தியப் படையினரும், ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்தினரும் இணைந்து பண்டத்தரிப்பு சந்தியில் நின்ற மக்களைத் தாக்கினார்கள்.

சுதாகர் தலைமையில் வந்த ஈ.பி.ஆர்.எல்.எஃப். உறுப்பினர்களுக்கு ஒரு நல்ல யோசனை தோன்றியது.

உணர்ச்சிவசப்பட்டவர்களாக நடித்துக்கொண்டு பண்டத்தரிப்பு சந்தியிலுள்ள நகைக்கடைகளுக்குள் புகுந்து சூறையாடினார்கள். அதனைக் கண்ட இந்தியப் படையினர் தடுத்திராவிட்டால் நகைக்கiயை முழுதாக சுத்தம் செய்து முடித்திருக்கும் சுதாகர் கோஷ்டி.

இந்தியப் படையினரால் பயமின்றி நடமாடவே முடியாதளவுக்கு வட்டுக்கோட்டையில் பல தாக்குதல்களை தனி நபராக நின்றும், தனது கெரில்லாக் குழுவுடனும் இணைந்தும் மேற்கொண்டான் தும்பன்.

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் மானிப்பாய் நவாலியில் இருந்த தனது வீட்டுக்கு வந்திந்தார் ஈ.என்.டி.எல்.எஃப். இயக்க உறுப்பினர் ஒருவர்.

தும்பனுக்குத் தகவல் போனது. தனியாக சைக்கிளில் வந்தான். சென்றிப் பொயின்றில் தடுக்கவே இல்லை.

தேடி வந்த ஈ.என்.டி.எல்.எஃப். உறுப்பினரை அழைத்தான் “அண்ணே! அண்ணே” வெளியே வந்தார். பிஸ்டலை உருவி மண்டையில் சுட்டுவிட்டு சைக்கிளில் சென்றுவிட்டான்.

இளவாலை தேவாலயம் அருகே பூசை. மக்கள் திரண்டு நின்றனர். இந்தியப் படையின் நடமாட்டமும் இருந்தது. தேவாலயம் அருகே வெடிஓசை. ஓடிச்சென்று பார்த்தனர் இந்தியப் படையினர். ஏனைய இயக்க உறுப்பினர் ஒருவர் பலியாகிக் கிடந்தார்.

தனிமனிதனாக நின்று இத்தனை தூரம் துணிந்து செயற்படும் தும்பனை மலைபோன்ற தோற்றத்துடன் கற்பனை செய்து கொண்டு தேடியது இந்தியப் படை.

ஆனால் தும்பனோ மெல்லிய உடல்வாகுடன் எளிமையான தோற்றத்துடன் இடுப்பில் பிஸ்டலுடன் சுற்றித்திரிந்தான்;;;.

பண்டத்தரிப்பு சுற்றிவளைப்பு ஒன்றில் மாட்டினான் தும்பன்.

அவனிடமே விசாரித்தார்கள்.

“தும்பனைத் தெரியுமா?”

“தெரியாது!”
“தெரிந்தால் சொல்ல வேண்டும், போ!”
செல்ல அனுமதித்தனர்.
தும்பனின் நடவடிக்கைகள் தொடர்ந்தன.

(தொடர்ந்து வரும்)

அரசியல் தொடர் எழுதுவது அற்புதன்.

தொகுப்பு கி.பாஸ்கரன்

alalasuntharam