யாழ். அரியாலையில் நஞ்சருந்தி தற்கொலை செய்துகொண்ட இளம் குடும்பப்பெண் மற்றும் அவரது 3 பிள்ளைகளின் உடல்கள் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதில் தாயின் உடல் தகனம் செய்யப்பட்டதுடன், மூன்று பிள்ளைகளின் உடல்களும் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாக யாழ். அரியாலை பகுதியில் கடந்த வௌ்ளிக்கிழமை 28 வயதான இளம் தாய், தனது 4 வயதான பெண் குழந்தைக்கும், 2, 1 வயதுகளையுடைய ஆண் குழந்தைகளுக்கும் நஞ்சு கொடுத்து விட்டு தானும் தற்கொலை செய்திருந்தார்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றையதினம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இவர்களது இறுதி சடங்குகள் அரியாலையில் உள்ள அவர்களது வீட்டில் இன்று காலை இடம்பெற்றதுடன் செம்மணி சுடலையில் குறித்த பெண்ணின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.
ஒரு கோடி 17 இலட்சம் ரூபாய் பணத்தை நெருக்கமான நண்பருக்கு நம்பிக்கையின் அடிப்படையில் கொடுத்து விட்டு ஏமாற்றம் அடைந்த காரணத்தினால் குறித்த பெண்ணின் கணவர் முதலில் தற்கொலை செய்து உயிரிழந்திருந்தார்.
இந்த நிலையில் குறித்த பெண் மன உளைச்சலுக்குள்ளாகி இருந்த காரணத்தினாலும், கணவரின் பிரிவை தாங்க மடியாத நிலையில் தனது 3 பிள்ளைகளுக்கும் ஐஸ்கிரீமில் விஷம் கலந்து கொடுத்து விட்டு தானும் விஷம் பருகி உயிரிழந்துள்ளார்.
இதன்போது தனது மரணத்திற்கு காரணம் இவர்கள் தான் என குறிப்பிட்டு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனுக்கும் மற்றும் குடும்பத்தாருக்கும் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார்.
பண கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் பிஞ்சு குழந்தைகள் உட்பட ஒரு குடும்பமே பலியாகியதால் யாழ்ப்பாணம் முழுதும் பெரும் அதிர்ச்சியிலும் கவலையிலும் உள்ளது.
இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கு இன்று இடம்பெற்ற நிலையில் பலரின் கண்ணீருக்கு மத்தியில் பிஞ்சுக் குழந்தைகளின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டதுடன், தாயின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.