மணியம் தோட்டம், உதயபுரம் பகுதியில் கடந்த 22 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸாரின் விசாரணை வலயத்தில் உள்ள சீ.சீ.ரி.வி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 22 ஆம் திகதி குறித்த பகுதியில் இளைஞர்கள் மீது இனந்தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 24 வயதுடைய டொன் பொஸ்கோ ரிக்மன் என்பவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்துள்ள விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், மேற்படி சம்பவம் இடம்பெற்ற தினம் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்களில் தொடர்பான காணொளியே பொலிஸாரின் விசாரணை வலயத்தில் தற்போது உள்ளது.
குறித்த காணொளியில் உயிரிழந்த இளைஞர் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் செல்வது பதிவாகியுள்ளதுடன், அதற்கு முன்னதாக சந்தேகத்திற்கு இடமான முறையில் முச்சக்கரவண்டி ஒன்று செல்வதும், உயிரிழந்த இளைஞர் செல்வதை தொடர்ந்து மேலும் இருவர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்வரும் இந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
மேற்படி ஆதாரங்களை வைத்தே, முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளை பொலிஸார் கைப்பற்றியிருப்பதுடன், துப்பாக்கிதாரிகளையும் கைது செய்வதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.