மதுரை விமான நிலையத்துக்கு தேவர் பெயர் சூட்ட நடவடிக்கை: மு.க.ஸ்டாலின்

201710301136165865_MK-Stalin-Says-take-action-to-Thevar-name-is-madurai-airport_SECVPF
மதுரை:

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 110-வது ஜெயந்தி விழா ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் இன்று கொண்டாடப்பட்டது.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தெய்வீக திருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 110-வது ஜெயந்தி விழா மற்றும் 55-வது குருபூஜை இன்று நடைபெற்று வருகிறது.

தேவர் திருமகனின் புகழை போற்றும் வகையில் முதல்வராக இருந்த கலைஞர் மதுரை கோரிப்பாளையத்தில் தேவருக்கு பிரமாண்ட சிலை எழுப்பி பெருமை சேர்த்தார்.

பசும்பொன் கிராமத்தில் தேவர் நினைவிடத்தில் நூற்றாண்டு விழா கொண்டாடுகின்ற நேரத்தில் மணிமண்டபம், அணையா விளக்கு அமைத்து தந்தவர் கலைஞர்.

வேற்றுமையில் ஒற்றுமை காணக்கூடிய ஏழை, எளிய மக்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் விவசாய பெருங்குடி மக்கள் எல்லாத்தரப்பு மக்களும் போற்றுகின்ற மாபெரும் தலைவராக விளங்கியவர் தேவர் பெருமகனார்.

ஜாதி, மதம் கடந்து அனைத்து மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு அவருக்கு மரியாதை செலுத்துவதை தி.மு.க. பெருமையாக கருதுகிறது.

பசும்பொன் தேவருக்கு புகழ் சேர்க்கும் வகையில் மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகிறது.

தற்போது தமிழகத்தில் குதிரைபேர ஆட்சி நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்ட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இல்லையென்றால் தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சி அமைந்ததும் மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்ட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கைக்கு உரிய குரல் கொடுத்து நடவடிக்கை எடுப்போம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கமுதி அருகே அதானி குரூப் நிலம் கையகப்படுத்தும் பணியில் முறைகேடாக ஈடுபட்டுள்ளது. விவசாயிகளை கட்டாயப்படுத்தி நிலத்தை கையகப்படுத்துகிறார்கள்.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ராமநாதபுரத்தில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, பெரிய கருப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.