தினகரனுக்கு ஆதரவாக அவைத் தலைவர் மதுசூதனன் பேசியதால், மீண்டும் எடப்பாடி ஓபிஎஸ் அணிகளுக்கு இடையே பிரச்சனை எழுந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
எடப்பாடி-ஓபிஎஸ் அணிகள் ஒன்றாக இணைந்த பிறகும் கூட அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள பிரச்சனை இன்னும் தீர்ந்தபாடில்லை.
இரண்டு அணிகளும் எதிரும் புதிருமாக செயல்பட்டு வருகின்றன.
இது குறித்து ஓபிஎஸ் ஆதரவு முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் பேசும் போது, எங்களுக்குள் பிரச்சனை இருப்பது உண்மைதான். விரைவில் அது தீரும் என்று வெளிப்படையாக உண்மையை ஒத்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில், அதிமுக., அவைத் தலைவரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான மதுசூதனன் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தினகரனின் கையில்தான் இன்னும் ஆட்சி அதிகாரம் உள்ளது. அதனால்தான், உளவுத்துறை தகவல்கள் அனைத்தும் அவருக்கு செல்கின்றது.
‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்று தினகரன் கூறுவது உண்மையாகக் கூட இருக்கலாம் என்று மதுசூதனன் கூறினார்.
அவரின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுசூதனன் ஏன் அப்படி பேசினார்? என்று அதிமுக வட்டாரத்தில் விசாரிக்கும் போது சில உண்மைகள் தெரியவந்தது.
விரைவில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.
ஏற்கனவே, ஓபிஎஸ் அணி சார்பில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் போட்டியிட்டார்.
ஆனால், தற்போது எடப்பாடி-ஓபிஎஸ் அணிகள் இணைந்து விட்டதால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனை எதிர்த்து யாரை நிறுத்துவது என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனனை நிறுத்தக்கூடாது என்று அமைச்சர் ஜெயக்குமார் முட்டுக்கட்டை போட்டு வருகிறாராம்.
அதனால், கடுப்பாகிப்போன மதுசூதனன், தினகரனுக்கு ஆதரவாக பேட்டி அளித்துள்ளார்.
மதுசூதனன் அளித்துள்ள பேட்டியால், மீண்டும் எடப்பாடி ஓபிஎஸ் அணிகளுக்கு இடையே பிரச்சனை ஆரம்பித்துள்ளது என்று கூறப்படுகிறது.