குஜராத் தேர்தல்… முடிவைப் பாதிக்கவிருக்கும் மூன்று பேர்!

ரு குட்டி மாநிலத்தின் தேர்தல், இந்தியாவுக்கான பொதுத் தேர்தல் போல நாடு முழுக்க விவாதிக்கப்படுகிறது. காரணம், அந்த மாநிலம் குஜராத். ஆளும் பி.ஜே.பி ‘வளர்ச்சிக்கான மாடல்’ என இந்தியாவுக்கே முன்னுதாரணமாகப் பரிந்துரைக்கும் மாநிலம். கடந்த 22 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றியை மட்டுமே சந்தித்து ஆட்சியில் இருக்கும் பி.ஜே.பி-யும், 27 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சியைப் பறிகொடுத்த காங்கிரஸும் நேரடியாக மோதுகின்றன. குஜராத் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதைத் தீர்மானிக்கப் போவது நரேந்திர மோடி, அமித் ஷா, ராகுல் காந்தி ஆகிய மூன்று பேர் அல்ல. ஹர்திக் படேல், அல்பேஷ் தாகூர், ஜிக்னேஷ் மேவானி எனும் இந்தியா முழுக்க அதிகம் அறியப்படாத மூன்று பேர்தான்.

modi_11293கடந்த 95-ம் ஆண்டுமுதல் தொடர்ச்சியாக ஐந்து முறை குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி வென்றுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் குஜராத்தின் 26 நாடாளுமன்றத் தொகுதிகளையும் மொத்தமாக வென்றது பி.ஜே.பி. வரலாற்றிலேயே மிக மோசமான தோல்வியை குஜராத்தில் காங்கிரஸ் சந்தித்தது. மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. குஜராத் மண்ணின் மைந்தர்களான மோடி தேசத்தின் பிரதமராகவும், அமித் ஷா பி.ஜே.பி-யின் தேசியத் தலைவராகவும் இருக்கும் சூழலில், அந்தக் கட்சி இன்னும் எளிதான வெற்றியைப் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால், கள நிலவரம் அப்படி இல்லை. இமாசலப் பிரதேசத் தேர்தல் அட்டவணையோடு குஜராத் தேர்தல் தேதியை அறிவிக்காமல், ‘வெள்ள நிவாரணப் பணிகளை’க் காரணம் காட்டி தள்ளிப் போட்டது தலைமைத் தேர்தல் ஆணையம். இடைப்பட்ட காலத்தில் மூன்றுமுறை குஜராத் வந்தார் மோடி. பல திட்டங்களைத் தொடங்கிவைத்தார். (வதோதராவில் அவர் பங்கேற்ற பேரணிக்கு எதிர்பார்த்த கூட்டம் இல்லை.) பொதுத்துறை வங்கிகளுக்கு மூலதனமாக மத்திய அரசு 2.11 லட்சம் கோடி ரூபாய் தருவதாக அறிவித்ததே குஜராத் தேர்தலை மனதில் வைத்துதான் என்று கூறப்பட்டது. விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன், ஆசிரியர்களுக்கும் உள்ளாட்சித்துறை ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு, சொட்டுநீர்ப் பாசனக் கருவிகளுக்கான ஜி.எஸ்.டி வரி திரும்பத் தரப்படும் என்று பல அறிவிப்புகளை மாநில அரசு செய்ததற்கு மறுநாள்தான் குஜராத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

அல்பேஷ் ஜிக்னேஷ் ஹர்திக்

குஜராத்தில் பி.ஜே.பி-க்கு குக்கிராமங்கள் வரை கிளைகளோடு வலிமையான கட்சி அமைப்பு இருக்கிறது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பூத் கமிட்டி உண்டு. இந்தியாவிலேயே எந்தக் கட்சிக்கும் இப்படி எங்கும் ஓர் கட்டமைப்பு இல்லை. தேர்தல் வியூகங்களில் நிபுணரான அமித் ஷா குஜராத்திலேயே டேரா போட்டிருக்கிறார். தேர்தல் பிரசாரத்தில் நிகரற்றவரான பிரதமர் மோடி, அவர்கள் பக்கம் இருக்கிறார். ஆரம்பகட்ட கருத்துக்கணிப்புகள் ‘பி.ஜே.பி வெற்றி பெறும்’ என்கின்றன. ‘‘மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 150 இடங்களில் வெல்வோம்’’ என அமித் ஷா சவால் விட்டாலும், பி.ஜே.பி முகாமில் பதற்றம் தெரிகிறது.

குஜராத் காங்கிரஸ் கலகலத்துப் போய்க் கிடக்கிறது. பல தொகுதிகளில் செல்வாக்கான பொறுப்பாளர்களே இல்லை. அந்தக் கட்சியின் செல்வாக்கான தலைவர்களில் ஒருவரான சங்கர்சிங் வகேலா, சமீபத்தில்தான் தன் ஆதரவாளர்களோடு விலகிப் போய் தனிக்கட்சி ஆரம்பித்திருக்கிறார். 61 எம்.எல்.ஏ-க்களோடு இருந்த காங்கிரஸிலிருந்து, சில மாதங்களுக்கு முன்புதான் கலகம் செய்து 18 எம்.எல்.ஏ-க்கள் விலகிப் போனார்கள். ஆனாலும் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக இருக்கிறார்கள். ‘‘125 தொகுதிகளில் வெல்வோம்’’ என மாநில காங்கிரஸ் தலைவர் பாரத்சிங் சோலங்கி சொல்கிறார்.

காரணம்? ஜாதிக்கணக்கு. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர், தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர்கள், முஸ்லிம்கள் ஆகியோரை இணைத்து வலுவான ஜாதி ஓட்டு வங்கியை காங்கிரஸ் உருவாக்கி வைத்திருந்தது. கடந்த 80 மற்றும் 85 தேர்தல்களில் இதை வைத்து காங்கிரஸ் மகத்தான வெற்றியைப் பெற்றது. கிட்டத்தட்ட படேல் உள்ளிட்ட முன்னேறிய சமூகத்தினரை ஒதுக்கி வைத்துவிட்டுப் பெற்ற வெற்றி இது. பி.ஜே.பி சாமர்த்தியமாக இந்த ஜாதி ஓட்டு வங்கியை உடைத்து, தேசியவாத உணர்ச்சியைப் புகுத்தியது. ‘இந்து’ என்ற அடையாளத்தின்கீழ் எல்லோரையும் இணைத்து மிகப்பெரிய ஓட்டு வங்கியை உருவாக்கியது. இதுதான் அவர்களைத் தோற்கவே முடியாத சக்தியாக மாற்றியது. ஆனால், இப்போது மீண்டும் ஜாதிரீதியாக அமைப்புகள் உருவெடுத்து, அவை செல்வாக்கும் பெற்றுள்ளன. அவை தேர்தலில் பி.ஜே.பி-க்கு எதிராக இருக்கவும் போகின்றன.

இப்படி ஜாதி அமைப்புகளை ஆரம்பித்தவர்களில் அல்பேஷ் தாகூர் சமீபத்தில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸில் இணைந்துள்ளார். 41 வயது அல்பேஷ், சமூக சேவகராக குஜராத்தில் பிரபலம். ‘ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி ஏக்தா மன்ச்’ என்ற இவரின் அமைப்பு கடந்த ஏழு ஆண்டுகளாக விவசாயக் கடன் தள்ளுபடி, கள்ளச்சாராய ஒழிப்பு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு போன்ற கோரிக்கைகளுக்காகப் போராடி வந்தது. ஷத்திரியர்கள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் மத்தியில் செல்வாக்கு பெற்ற இந்த அமைப்புக்கு 77 தொகுதிகளில் எல்லா நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் பூத் கமிட்டி வைத்திருக்கும் அளவுக்கு செல்வாக்கு உள்ளது.

காங்கிரஸ் நம்பியிருக்கும் இன்னொருவர், ஜிக்னேஷ் மேவானி. இந்த 36 வயது வழக்கறிஞர், தலித் போராளியாக குஜராத்தில் அறியப்பட்டவர். கடந்த ஆண்டு ஜூலையில், உனா பகுதியில் நான்கு தலித்துகள் பொது இடத்தில் தாக்கப்பட்டதை எதிர்த்து நடந்த போராட்டங்கள் மூலம் பிரபலமானவர். அந்தப் போராட்டம்தான் அப்போதைய முதல்வர் ஆனந்திபென் படேலை பதவி விலக வைத்தது. இவரின் ராஷ்ட்ரிய தலித் அதிகார் மன்ச் அமைப்பு, தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளது. ஜிக்னேஷ் காங்கிரஸிலும் இணையவில்லை. ‘‘எங்கள் இலக்கு பி.ஜே.பி-யைத் தோற்கடிப்பதுதான். அதற்காக குஜராத் முழுவதும் பிரசாரம் செய்வேன். தலித் வாக்குகள் இம்முறை காங்கிரஸுக்கே விழும். தலித்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், வியாபாரிகள், விவசாயிகள் என எல்லோரும் பி.ஜே.பி-க்கு எதிராக உள்ளனர். பி.ஜே.பி-க்கு எதிரான மனநிலை குஜராத்தில் இருந்தாலும், காங்கிரஸுக்கு ஆதரவான மனநிலை இன்னும் உருவாகவில்லை. விரைவில் உருவாகிவிடும்’’ என்கிறார் ஜிக்னேஷ்.

காங்கிரஸ் நம்பும் மூன்றாவது நபர், 24 வயது ஹர்திக் படேல். கடந்த 22 ஆண்டு கால பி.ஜே.பி ஆட்சிக்குத் தூணாக இருந்தது படேல் சமூகம்தான். ஒரு காலத்தில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராகப் போராடிய இந்த சமூகத்தை இப்போது இட ஒதுக்கீடு கேட்டு போராட வைத்திருப்பவர். இவரின் ‘படிதார் அனாமத் அந்தோலன் சமிதி’ அமைப்பும் தேர்தலில் போட்டியிடவில்லை. தேசத் துரோக வழக்கு, தொடர் சிறை வாசம் என அனுபவித்த ஹர்திக், இப்போது பி.ஜே.பி மீது கடும் கோபத்தில் இருக்கிறார். ‘‘எங்கள் இலக்கு பி.ஜே.பி-யைத் தோற்கடிப்பது. அதன்மூலம் காங்கிரஸ் பலனடைகிறது என்றால், அதுபற்றி எங்களுக்குக் கவலையில்லை’’ என்கிறார் ஹர்திக். காங்கிரஸுக்கு பல நிபந்தனைகளை ஹர்திக் விதித்தாலும், அவர் வேறு எங்கும் போக மாட்டார் என உறுதியாக நம்புகிறார் ராகுல்.

‘தேர்தல் அனுபவம் இல்லாத இவர்களை நம்ப முடியாது’ என சில காங்கிரஸ் தலைவர்கள் கருதினாலும், அப்படி ஒதுக்கக்கூடிய நபர்கள் இல்லை இவர்கள். ஆனால், பி.ஜே.பி தலைவர்கள் பலரும் இவர்களை அலட்சியப்படுத்துகிறார்கள். ‘‘குஜராத்தில் ஜாதிக்கும் வேலை இல்லை. ஜாதி அமைப்புகளுக்கும் வேலை இல்லை’’ என்கிறார்கள் அவர்கள். ராகுலைவிட மோடிக்கு தேர்தல் அனுபவமும் அரசியல் முதிர்ச்சியும் அதிகம். ஒரு குஜராத்தி இப்போது பிரதமராக இருக்கும்போது, அவரை குஜராத் மக்கள் கைவிட மாட்டார்கள் என நம்புகிறது பி.ஜே.பி. அந்த நம்பிக்கைதான் களத்தில் அவர்களை உற்சாகமாக வைத்திருக்கிறது.