புதிய அரசியலமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுன்றத்தைப் புறக்கணித்த தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதியபோசனத்துக்காக நாடாளுமன்ற உணவகத்துச் சென்றிருந்தனர்.
இடைக்கால அறிக்கை தொடர்பாக விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் ஆரம்பமானது. இதனைப் புறக்கணிப்பதாக, விமல் வீரவன்சவின் தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி அறிவித்திருந்தது.
அத்துடன், அந்தக் கட்சியின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தின் முன்பாக கூட்டு எதிரணி நடத்திய ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்றிருந்தனர்.
இந்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உணவகத்துக்குச் சென்று உணவு அருந்தினர்.
நாடாளுமன்ற உணவகத்தில் சபை அமர்வு நடைபெறும் நாட்களில் உறுப்பினர்களுக்கு குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் விற்கப்படுகிறது.
நாடாளுமன்றத்தைப் புறக்கணித்துக் கொண்டு, சலுகை விலை உணவுக்காக, தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் நாடாளுமன்ற உணவகத்துக்குச் சென்றிருந்தமை, அரசியல் வட்டாரங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.