அது நடக்க கூடாத ஒரு மரணம். சமீபத்திய இந்திய அரசியலில், தமிழக மாநில முதல் அமைச்சர் தனக்கென அசைக்க முடியாத ஒரு இடத்தை மாநிலத்திலும் மத்தியிலும் நிலை நிறுத்திக் கொண்டவர்.
அரசாங்கம், அதிகாரம், என அனைத்தும் இருந்தும், அவரது மரணம் ஏற்படுத்திய சந்தேகங்கள் முற்றுப்பெறாத தொடர்கதையாகவே இருக்கின்றன.
தமிழக மக்களிடையே மட்டுமின்றி, தேசிய அளவிலும், இந்த மர்மத்திற்கான விடையை அறிந்து கொள்ள அனைவருமே ஆர்வம் காட்டுகின்றனர்.
அதற்காக தற்போது தனி நீதிபதி நியமிக்கப்பட்டு, அதற்கான விசாரணைக் களத்தின் முதல் பகுதியாக, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீட்டில் இருந்து ஆரம்பமாக இருக்கிறது.
இது நல்லதொரு தொடக்கம் என்பது தான் அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்களின் பரவலான கருத்து.
அதிமுக என்ற மாபெரும் அரசியல் கட்சியை, ஒன் உமன் ஆர்மியாக இருந்து, கட்சியையும், ஆட்சியையும் திட்டமிட்ட கட்டுக்குள் கொண்டு வந்தவர் ஜெயலலிதா என்பதற்கு மாற்றுக் கருத்து கிடையாது. இதனை நேரடியாக இல்லா விட்டாலும், மறைமுகமாக, அனைத்து எதிர்க் கட்சிகளும் ஒப்புக் கொள்கிறார்கள். அவரது கண் அசைவிலேயே ஒவ்வொரு அரசியல் மூவ்மென்ட்டுகளையும் மேற்கொண்டார்.
அதனால் தான் அவர் இருக்கும் வரை அடக்கி வாசித்த, அவரது கட்சி ஆட்சியாளர்கள், அவர் இறந்ததும், அவிழ்த்து விட்ட நெல்லிக்காய் மூட்டையாக ஆளுக்கொரு பக்கம் சிதறிக் கொண்டிருக்கின்றனர்.
இது அவரது மரண மர்ம முடிச்சை விட, நெடுந்தொடர் கதையாக இருக்கிறது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த போது, நான் பார்க்கவில்லை நீ பார்க்கவில்லை, என்று, இன்று வரை ஒவ்வொருவரும் பேசிக் கொண்டிருக்க, இதற்கும் உரிய விடை இந்த விசாரணையில் தான் அடங்கியிருக்கிறது.
இதற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க, நிச்சயம் அவரது மரணத்திற்கான உண்மைக் காரணம் நிச்சயம் கண்டு பிடிக்கப்பட வேண்டும்.
அவரது கொட நாட்டு பங்களாவில் நடந்த கொள்ளை, அதனைத் தொடர்ந்து தேடப்பட்டவர்களின் சந்தேகத்திற்கிடமான மர்மமான மரணங்கள், என்று ஒரு துப்பறியும் நாவலை விட விறுவிறுப்பாக, நிஜக் காட்சிகள் அரங்கேறியிருக்கின்றன.
இவை எல்லாவற்றிற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், அதற்கும் இந்த விசாரணை நிச்சயம் தேவை என்பதே, அடித்தட்டு மக்களிடம் கூட ஏற்பட்டிருக்கும், நியாயமான கோரிக்கை. ஏனென்றால், இதில் தான் அதிமுகவின் அரசியல் எதிர்காலமே அடங்கியிருக்கிறது.
ஜெயலலிதா என்ற ஒரு இரும்புப் பெண்மணிக்கு இருந்த செல்வாக்கை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இப்போதுள்ள ஆட்சியாளர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாகத் தான் இருக்கிறது.
தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் என்ற நிலையில் தான், கட்சியிலும், ஆட்சியிலும் உள்ள ஒவ்வொருவரும் இருக்கிறார்கள். அவர்களே இப்போது, ஒருவர் மாற்றி ஒருவர் மற்றவர் மீது சேற்றை வாசி இறைத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த அவல நிலைக்கு ஒரு முடிவு காணவும், ஜெயலலிதாவின் மரணத்தில் விழுந்த மர்ம முடிச்சு நிச்சயம் அவிழ்க்கப்பட வேண்டும்.
ஆனால் இந்த விசாரணையில் எந்த குளறுபடிகளும் இல்லாமல், இதில் உள்ள மர்மத்தின் ஆணிவேர் வரை ஆராய்ந்தால் மட்டுமே, ஒவ்வொரு கேள்விக்கும், சந்தேகத்திற்கும் விடை கிடைக்கும்.
ஏனென்றால், “மக்களால் நான், மக்களுக்காக நான்” என்று அவர் சொன்ன வாசகத்தை இன்றும் அவரது வேத வாக்காக எண்ணிப் போற்றிக் கொண்டிருக்கிறார்கள், தமிழ் மக்கள்.
அதனால் தான் அவரது மரணத்தை நேரிலும், தொலைக்காட்சியிலும், பத்திரிகையிலும் கண்டு கலங்கிய கண்களின் ஈரம் கூட இன்னும் உலராமலே இருக்கிறது!