தமிழகத்தில் ஐஏஎஸ் தேர்வில் காப்பியடித்து சிக்கிய ஐபிஎஸ் அதிகாரி கைது செய்யப்பட்ட நிலையில் அவரது மனைவியும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவில் சிவில் தேர்வுகள் அவ்வப்போது நடைபெற்று வரும், அது போன்று கடந்த 28 ஆம் திகதி தமிழகத்தில் சிவில் சர்விஸ் தேர்வு நடைபெற்றது.
இதற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்வு மையம் அமைக்கப்பட்டது. அதே போன்று சென்னை எழும்பூரில் உள்ள பெண்கள் உயர் நிலைப்பள்ளியில் இதற்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டது.
அப்போது இந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய ஷபீர் கரீம் என்பவர் புளுடூத் மூலம் தேர்வு எழுதுவது கண்டுபிடிக்கப்பட்டதால், அவர் உடனடியாக பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் அவர் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பயிற்சி ஐபிஎஸ் அதிகாரியாக இருப்பது தெரியவந்தது.
மேலும் அவர் ஹைதராபாத்தில் உள்ள தனது மனைவியிடம் புளூடூத் மூலம் கேள்விகளுக்கான பதிலை கேட்டு தேர்வு எழுதியதும் தெரியவந்ததால் அவர் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
ஷபீர் கரீம் தேர்வில் காப்பியடிக்க உதவிய அவரது மனைவியையும் பொலிசார் தற்போது கைது செய்துள்ளனர். ஹைதராபாத்தில் இருக்கும் அவர் சென்னை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளபப்ட்டு வருவதா தெரிவிக்கப்பட்டுள்ளது.