பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மொபைல் சந்தையில் நுழைந்த நோக்கியா விட்ட இடத்தைப் பிடிக்கும் முயற்சியில் இருக்கிறது. அதற்கு தகுந்தவாறு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஏதாவது ஒரு ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி விடுகிறது. இதில் குறைந்த விலை மற்றும் விலை அதிகம் கொண்ட ஸ்மார்ட்போன்களும் அடக்கம். கடந்த மாதம் நோக்கியா 8 என்ற ஃப்ளாக்க்ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் நோக்கியா 2 என்ற ஸ்மார்ட்போனை நேற்று அறிமுகப்படுத்தியிருக்கிறது.
நோக்கியா 2 வசதிகள்
- 5 இன்ச் LTPS IPS LCD 720 x 1280 திரை.
- 1.3 GHz குவால்கோம் ஸ்னாப்ட்ராகன் 212 குவாட்கோர் ப்ராசஸர்.
- 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டர்னல் மெமரி.
- 8 மெகாபிக்சல் பின்புற கேமரா.
- 5 மெகாபிக்சல் முன்புற கேமரா.
- 4100mAh பேட்டரி திறன்.
- ஆண்ட்ராய்டு 7.1.1 நொளகட் இயங்குதளம்.
குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்கள் வாங்க விரும்புகிறவர்களை மனதில் கொண்டு இந்த ஸ்மார்ட்போனை வடிவமைத்திருக்கிறது நோக்கியா. அதுவும் இந்த ஸ்மார்ட்போனை இந்தியாவில்தான் முதன்முதலில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. 5 இன்ச் ஹெச்டி திரையைக்கொண்ட இந்த ஸ்மார்ட்போனின் திரை LTPS தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக IPS LCD வகை திரைகளை விடவும் திரையில் தெரியும் காட்சிகள் தெளிவாக இருக்கும். கட்டமைப்பு தரத்தை பொறுத்தவரையில் நோக்கியா எப்பவும் கவனமாக இருக்கும். இதனை அலுமினியம் மற்றும் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி தயாரித்திருக்கிறது. இதன் நடுவில் இருக்கும் பகுதி அலுமினியத்தால் ஆனது. திரை எளிதில் பாதிப்படையாமல் இருப்பதற்காக கொரில்லா கிளாஸ் 3 பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இதன் பேட்டரி திறன் நோக்கியா இதற்கு முன்பு அறிமுகப்படுத்திய மற்ற ஸ்மார்ட்போன்களை விட அதிகம். இதில் 4100mAh பேட்டரி திறன் கொண்ட பேட்டரி இருக்கிறது. மொபைலை ஒரு முறை சார்ஜ் செய்தால் இரண்டு நாள்கள் வரை பயன்படுத்த முடியும் என்கிறது நோக்கியா.
தற்பொழுது ஸ்டாக் ஆண்ட்ராய்டு நொளகட் இயங்குதளத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனுக்கு அப்டேட்கள் உடனுக்குடன் கிடைக்கும். அதுபோக புகைப்படம் மற்றும் வீடியோக்களை அன்லிமிடெட்டாக சேமித்துக்கொள்ள முடியும். டூயல் சிம் மற்றும் ஒரு சிம் என இரண்டு வகைகளில் கிடைக்கும். பின்புற கவரை அகற்றுவதன் மூலம் சிம் மற்றும் மெமரி கார்டை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். இப்பொழுது வெளியாகும் மொபைல்களில் இருப்பது போலவே இதில் இருக்கும் பேட்டரியை தனியாக எடுக்க முடியாது. முழுமையான வாட்டர்ஃப்ரூப் வசதி இல்லாவிட்டலும் குறைந்த அளவு தூசி மற்றும் நீரிலிருந்து பாதுகாப்பாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
வடிவமைப்பு விஷயத்தில் கவனமாக இருந்த நோக்கியா மற்ற விஷயங்களில் சறுக்கியிருக்கிறது. இதில் இருப்பது 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டர்னல் மெமரி மட்டுமே. இந்த செக்மன்ட்டில் இதை விட அதிக வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் இருக்கின்றன. அதேபோல இன்று எல்லா ஸ்மார்ட்போன்களிலும் தவறாமல் இடம்பெறும் கைரேகை சென்சார் இதில் மிஸ்ஸிங். கேமரா, வடிவமைப்பு, பேட்டரி என ஏதாவது ஒரு வசதியை மட்டும் எடுத்துக்கொண்டு அதை மட்டுமே தனது ஸ்மார்ட்போனில் முன்னிலைப்படுத்துகிறது நோக்கியா. இன்றைய வாடிக்கையாளர்களின் அனைத்து வசதிகளும் இருக்கும் ஸ்மார்ட்போன்களை மட்டுமே விரும்புகிறார்கள் என்பதை நோக்கியா உணர்ந்தால் நல்லது. ஏனென்றால் இதே விலையில் ஜியோமி, மோட்டோரோலா போன்ற நிறுவனங்கள் இரு மடங்கு வசதியை அளிக்கின்றன. விலை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும் இந்திய ரூபாய் மதிப்பில் 7500 ரூபாயாக நிர்ணயம் செய்யப்படலாம். அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது நோக்கியா 2.