தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. பல இடங்களில் கனமழையும் பெய்து வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது உருவாகியுள்ள தாழ்வு நிலையால் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஒரு நாள் மழைக்கே சென்னையில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு முன்னெச்சரிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், மக்கள் தொலைக்காட்சியின் அச்சமில்லை விவாத நிகழ்ச்சியில், வானிலை ஆய்வு மைய முன்னாள் இயக்குனர் ரமணனை தொடர்பு கொண்டு நெறியாளர் பாஸ்கரன் கேள்வி எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது:
இது போன்ற வானிலை அறிக்கைகளை புனேவில் உள்ள நீண்ட கால வானிலை மையம் தான் அறிக்கை தயாரிக்கும். அந்த மையம் 1 விழுக்காட்டிற்கு குறைவாகவும் 11 விழுக்காட்டிற்கு அதிகாமகவும் மழை இருக்கும் என்று தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்திற்கு கண்டிப்பாக மழை இருக்கும்.
புயல் என்பது 10 நாள் மற்றும் 8 நாள் முன்பு தான் சிக்னல் கிடைக்கும். தாய்லாந்து வளைகுடா கடற்பகுதியில் இருந்து வரும் என்று ஒரே ஒரு சிக்னல் கிடைத்துள்ளது.
வேறு இரண்டு கணினி சார்ந்த கணிப்புகள் மூலம் கிடைத்த சிக்னலில் தாழ்வு நிலையாக வரும் என்று தெரிகிறது. தாழ்வு நிலையாகவே இருந்து வலுப்பெறாமல் இருந்தால் தான் புயல் தமிழகத்திற்கு வரும்.
வலுப்பெற்றுவிட்டால் புயல் ஆந்திரா மற்றும் ஒரிசாவுக்கு சென்றுவிடும். தமிழகத்திற்கு வராது, மழையும் கிடைக்காது. இந்த தகவலானது, 8 மற்றும் 9 தேதிகளில் வரப்போகும் புயலுக்கானது.
தற்போது மன்னார் வளைகுடாவில் உருவாகியிருக்கும் இப்போது உள்ள தாழ்வு நிலையானது கண்டிப்பாக மழை கொடுக்கும். வரும் 2 அல்லது 3 நாடுகளுக்கு மழை நீடிக்கும். இவ்வாறு ரமணன் கூறினார்.