யாழ். அரியாலை, கிழக்கு மணியம்தோட்டம் பகுதியில் இளைஞரொருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பவற்றை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர்.
குறித்த துப்பாக்கி மற்றும் முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பன யாழ். பண்ணை வீதியில் உள்ள விசேட அதிரடிப் படை முகாமில் இருந்து நேற்று இரவு (31.10) மீட்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் 22ஆம் திகதி யாழ். அரியாலை கிழக்கு மணியம்தோட்டம் வசந்தபுரம் முதலாம் குறுக்கு வீதிப் பகுதியில் 24 வயதுடைய டொன்பொஸ்கோ ரிக்மன் என்பவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தார்.
மேற்படி துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது, சம்பவ வலயத்தில் இருந்து சி.சி.ரி.வி காணொளிகள் பெறப்பட்ட நிலையில், அந்த காணொளிகளின் ஊடாக துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை புரிந்தவர்கள் விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினர் என தகவல்கள் வெளியாகியிருந்தன.
அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டியும், விசேட அதிரடிப்படை முகாமில் இருந்ததையும் ஆதாரமாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் எடுத்துக்கொண்டனர்.
அதன்பிரகாரம் விசேட அதிரடிப்படையினர் புலனாய்வு அதிகாரிகளிடம் கடந்த திங்கட்கிழமை (30.10) வாக்குமூலம் பெற்றுக்கொண்டதன் அடிப்படையில் துப்பாக்கிதாரர்கள் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் வாகனங்களும் மீட்கப்பட்டுள்ளன.
அதேவேளை, மிகவிரைவில் சந்தேகநபர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.