இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முட்கள் நிறைந்த பாதையில் அதிகம் பயணித்தவர் என்று ஆஷிஷ் நெஹ்ராவைக் கூறலாம்.
1999-ம் ஆண்டு இந்திய அணிக்குள் அடியெடுத்து வைத்த நெஹ்ரா, மற்ற பந்து வீச்சாளர்களை விட அதிக காலம் இந்திய அணிக்காக ஆடியவர்.
ஆனால் இந்த 18 ஆண்டுகளில் அவர் விளையாடிய போட்டிகள் மிகவும் குறைவு. 17 டெஸ்ட் போட்டிகளிலும், 120 ஒருநாள் போட்டிகளிலும், 26 டி 20 போட்டிகளிலும் மட்டுமே அவர் பங்கேற்றுள்ளார்.
அடிக்கடி காயம் அடைந்ததும் தேர்வாளர்கள் அவர் விஷயத்தில் காட்டிய பாரபட்சமுமே இதற்கு காரணம்.1999-ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் ஆஷிஷ் நெஹ்ரா.
இந்தப் போட்டியில் ஒரு விக்கெட்டை மட்டும் வீழ்த்தியதால் மீண்டும் அவரை அணிக்கு தேர்வு செய்வதில் தேர்வுக் குழுவினர் ஆர்வம் காட்டவில்லை. ஆனால் கங்குலி கப்டன் ஆன பிறகு அவரது வாழ்க்கையில் வெளிச்சம் விழுந்தது. 2001-ம் ஆண்டு கங்குலி தலைமையில் ஜிம்பாப்வேக்கு பயணம் செய்த இந்தியக் குழுவில் ஆஷிஷ் நெஹ்ராவுக்கு இடம் கிடைத்தது.
இந்த தொடரில் ஜாகிர் கானுடன் சேர்ந்து தொடக்க ஓவர்களில் நெஹ்ரா ஜாலம் செய்ய, கங்குலியின் பிரியத்துக்கு உரியவரானார்.
2003-ம் ஆண்டில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விஸ்வரூபம் எடுத்த நெஹ்ரா 23 ரன்களைக் கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். ஆனால் அதன் பின் சில போட்டிகளில் சொதப்ப, 2004-ம் ஆண்டில் தேர்வுக் குழுவினர் இவரைத் தூக்கி அடித்தனர். அதோடு காயங்களும் படுத்த நெஹ்ராவின் பயணம் தடைபட்டது.
ஆனால் நெஹ்ரா, போராடிக்கொண்டே இருந்தார். உள்ளூர் மற்றும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தன் திறமையை வெளிப்படுத்தினார்.ஐபிஎல் மற்றும் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் அவரது செயல்பாடு இந்திய அணியின் அப்போதைய கப்டன் தோனியையும், பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டனையும் ஈர்த்தது.
இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளராக இருந்த ஜாகிர் கான் காயமடைய அவருடைய இடத்துக்கு நெஹ்ராவை கொண்டுவந்தது தோனி – கிர்ஸ்டன் கூட்டணி. இதனால் 5 ஆண்டுகளுக்கு பிறகு 2009-ம் ஆண்டில் இந்திய அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டார் நெஹ்ரா.
2011-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடர் வரை நெஹ்ராவுக்கு மீண்டும் வசந்த காலமாக இருந்தது. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்திய பந்துவீச்சின் முதுகெலும்பாகத் திகழ்ந்தார்.
2011-ம் ஆண்டு உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் 33 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்திய நெஹ்ரா, அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
ஆனால் இப்போட்டியின்போது காயமடைந்த அவரால் சில காலம் விளையாட முடியாமல் போனது. அதன் பிறகு தேர்வுக்குழுவினரால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட நெஹ்ரா, 5 ஆண்டு வனவாசத்துக்குப் பிறகு கடந்த 2016-ம் ஆண்டுதான் மீண்டும் அணிக்கு திரும்பினார்.
ஒருபுறம் தேர்வுக் குழுவால் புறக்கணிக்கப்பட்ட நெஹ்ராவை மறுபுறம் காயங்களும் துரத்தின. 12 முறை அறுவைச் சிகிச்சைக்கு உள்ளான அவர் ஒவ்வொரு முறையும் கடுமையாக பயிற்சிகளைச் செய்து வேகப்பந்து வீச்சுக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டார்.
காயங்களை விட தேர்வுக்குழுவின் புறக்கணிப்புதான் நெஹ்ராவை சோர்வடைய வைத்தது. இதுபற்றி ஒருமுறை செய்தியாளரிடம் ‘ஒருவேளை என் முகம் தேர்வாளர் களுக்கு பிடிக்கவில்லையோ என்னவோ’ என்று நெஹ்ரா கூறியுள்ளார்.
38 வயதிலும் புயலாக பந்து வீசிவரும் நெஹ்ரா, 17 டெஸ்ட் போட்டிகளில் 44 விக்கெட்களையும், 120 ஒருநாள் போட்டிகளில் 157 விக்கெட்களையும், 26 டி 20 போட்டிகளில் 34 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.
நியூஸிலாந்துக்கு எதிராக டெல்லியில் இன்று நடை பெறவுள்ள டி 20 போட்டியுடன் இந்த போர் வீரன் கிரிக்கெட் உலகுக்கு விடை கொடுக்கிறார்.
‘நன்றாகத்தானே பந்து வீசிக்கொண்டு இருக்கிறீர்கள். ஓய்வு பெற ஏன் அவசரப்படுகிறீர்கள்’ என்று நிருபர்கள் கேட்டதற்கு ‘ஏன் ஓய்வு பெறுகிறீர்கள் என்று மற்றவர்கள் கேட்கும் நிலையில் ஓய்வு பெறுவதுதான் ஒரு விளையாட்டு வீரனுக்கு சிறப்பு சேர்க்கும்.
ஏன் இன்னும் ஆடிக்கொண்டிருக்கிறீர்கள் என்று மற்றவர்கள் கேட்கும்வரை விளையாடக்கூடாது என்பதே என் கருத்து’ என்று கூறியுள்ளார் நெஹ்ரா.
ஓய்வு பெற்றாலும், கிரிக்கெட் பயிற்சியாளராகவோ வர்ணனையாளராகவோ புதிய அவதாரம் எடுப்பது குறித்து யோசித்து வருவதாக நெஹ்ரா கூறியுள்ளார். ஒரு வீரராக இல்லாவிட்டாலும், மற்ற வழிகளில் அவரது சேவை தொடரட்டும்.