வடமாகாண விவசாய அமைச்சின் அம்மாச்சி உணவகம் மன்னார் மாவட்டத்தில் கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தினுள் அமைக்கப்படுவது மக்கள் மத்தியில் விசனத்தைத் தோற்றுவித்துள்ளது.
வடமாகாண விவசாய அமைச்சினால் மாவட்டம் தோறும் அமைக்கப்பட்டு வரும் அம்மாச்சி உணவகம் தற்போது மன்னார் மாவட்டத்திலும் அமைக்கப்பட்டு வருகின்றது.
குறித்த அம்மாச்சி உணவகம் கிளிநொச்சி, வவுனியா, யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் மிகவும் சிறப்பாக இயங்கி வருகின்றது.
இந்நிலையில், மன்னார் மாவட்டத்திலும் யாருக்கும் தெரியாது இரகசியமான முறையிலும் இரகசியமான இடத்திலும் அமைக்கப்பட்டு வருவது இதுவரையிலும் யாரும் அறிந்திராத விடயமாக உள்ளது.
மன்னார், மதவாச்சி பிரதான வீதி, முருங்கன் பகுதியில் உள்ள அரச கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தினுள் நீண்ட காலமாக ஒரு கட்டடம் அமைக்கப்பட்டு வருகின்றது.
இதுவரை காலமும் அது கால்நடை வளர்ப்பிற்கான ஒரு நிலையம் என்று கூறப்பட்டது, எனினும் தற்போதுதான் அது மன்னார் மாவட்டத்திற்கான அம்மாச்சி உணவகம் என்று அறியக் கிடைத்துள்ளது.
இந்நிலையில் குறித்த அம்மாச்சி உணவகத்தை அமைக்கும் திணைக்களம் இது குறித்து சிந்திக்கவில்லையா எனவும், ஊழல் மோசடியை மேற்கொள்ளவென இடம் தீர்மானிக்கப்பட்டதா, இவ்விடத்தை தெரிவு செய்தது யார்? இதற்கு அனுமதி வழங்கியது யார்? இக்கட்டடம் அமைக்க நிதியை விடுவித்தது யார்? போன்ற பல கேள்விகள் தற்போது மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.
மேலும் குறித்த அம்மாச்சி உணவகத்தினை அமைப்பதற்கு சுமார் ஒரு கோடியே இரண்டு இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.