அடையாளம் தெரியாத ஒரு நபரின் நிழலைப் பார்த்தபோது 35 வயதாகும் தஸ்லிமா ரஃப், இந்திய நிர்வாகத்தின் கீழ் இருக்கும் காஷ்மீரின் தலைநகரான ஸ்ரீநகரில் உள்ள தனது வீட்டின் மேல் தளத்தில் இருந்தார்.
தான் எதிர்வினையாற்றும் முன்பே தாக்கப்பட்டதாக அவர் கூறுகிறார். தஸ்லிமா உதவிக்காக கூக்குரல் எழுப்ப முயன்றபோது அந்த நபர் அவர் கழுத்தை நெரிக்க முயன்றார். பின்னர் சுயநினைவு இழந்துவிட்டார் தஸ்லிமா.
கீழே விழுந்து கிடந்த அவரை, பாதி தலைமுடி கத்தரிக்கப்பட்ட நிலையில் அவரது கணவர் கண்டார்.
கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் மட்டும் இதுபோன்ற சுமார் 40 சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் அங்கு பெரும் கோபம் உண்டாகியுள்ளதுடன் போராட்டங்களும் நடக்கின்றன.
அங்குள்ள பள்ளிகளும் கல்லூரிகளும் சிறிது காலம் மூடப்படும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது.
பெண்களின் கூந்தல் கத்தரிக்கப்படும் சம்பவங்கள் செய்தியாவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே, ஆகஸ்ட் மாதத்தில் ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில், பெண்கள் சுயநினைவின்றி இருக்கும்போது அவர்களின் கூந்தல் மர்மமான முறையில் கத்தரிக்கப்படும் சம்பவங்கள் நடந்துள்ளன.
ஆனால், இந்திய அரசுடன் ஸ்திரமற்ற உறவைப் பேணும் காஷ்மீரில் இந்த சம்பவங்களால் கண்காணிப்பும், வன்முறையும் அதிகரித்துள்ளன.
இந்த தாக்குதல்களுக்கு காரணமாணவர்கள் என்று இந்தியப் பாதுகாப்புப் படைகள், பிரிவினைவாதிகள் என இரு தரப்பினர் மீதும் குற்றம்சாட்டப்படுகிறது.
இவற்றைச் செய்பவர்கள் யார் என்ற தகவல் எதுவும் அறியப்படவில்லை. தங்கள் தாக்கப்பட்டு சுய நினைவை இழந்ததாகவும், கண் விழித்துப் பார்த்தபோது தங்கள் தலைமுடிவெட்டப்பட்டிருந்ததாகவும் பல பெண்கள் கூறியுள்ளனர்.
சில தாக்குதலாளிகள் முகமூடி அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் அவர்களைத் தாக்கியவர்களைப் பார்த்ததில்லை.
தனது அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ள விரும்பாத இப்பெண், இக்கட்டுரைக்காக, வெட்டப்பட்ட தன் தலைமுடியுடன் படம் பிடிக்கப்படுவதற்கு ஒப்புக்கொண்டார்.
தன் வீட்டின் வெளியே ஒரு காலைப் பொழுதில் தான் தாக்கப்பட்டதாக இவர் கூறுகிறார். அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி திருப்பட்டது. பிற சம்பவங்களை போலவே தாக்குதலாளி, வெட்டுப்பட்ட தலைமுடியை தன்னுடன் எடுத்துச் செல்லவில்லை. அது அங்கேயே விட்டுச் செல்லப்பட்டிருந்தது.
இந்த ‘முடி வெட்டும்’ சம்பவங்களால் காஷ்மீரில் பதற்றம் உருவாகியுள்ளது. ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி செய்யும் பாரதிய ஜனதா கட்சி, அம்மாநிலத்தின் அமைதியைக் குலைக்க பிரிவினைவாதிகள் மற்றும் தேச துரோகிகளால் கையாளப்படும் புதிய உத்தியே இந்த சம்பவங்கள் என்று கூறியுள்ளது. இது குறித்து நீதி விசாரணை கோருகிறது அக்கட்சி.
காஷ்மீர் பெண்களை இழிவுபடுத்துவதாகப் பார்க்கப்படும் இச்சம்பவங்களுக்கு எதிராக செயல்பாட்டாளர் அஷான் அண்டூ போராட்டம் நடத்தினார்.
தங்கள் மாநிலத்தின் “தாய்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின்” கண்ணியத்தைக் காக்க மாநில அரசு தவறிவிட்டதாக எதிர்க்கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
பீதியில் இருக்கும் உள்ளூர்வாசிகள் தங்கள் கிராமங்கள் வழியாக தீவிரவாதிகள் செல்வதை சொல்வார்கள் என்பதால், ‘தீவிரவாதத் தாக்குதல்களை எதிர்கொள்ள’ இந்திய அரசு கையாளும் புதிய உத்தி என்று ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்பு கூறியுள்ளது.
பொதுமக்கள் மற்றும் காவல் படையினரிடையே நடக்கும் சண்டைகளில்தான் போராட்டங்கள் பெரும்பாலும் முடிகின்றன. இந்த தாக்குதலாளிகளைப் பிடிக்க தனிப்படை ஒன்றை காஷ்மீர் காவல் துறை அமைத்துள்ளது. தகவல் கொடுப்பவர்களுக்கு 6 லட்சம் ரூபாய் சன்மானமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து சுதந்திரம் பெற விரும்பும் காஷ்மீர் மக்களை அச்சுறுத்தவே அரசின் பாதுகாப்புப் படைகள் இந்தத் தாக்குதல்களை திட்டமிட்டு நடத்துவதாக பிரிவினைவாதிகள் கூறுகின்றனர்.
இதைக் கண்காணிக்க காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் பல குழுக்களை அமைத்துள்ளனர். ஆனால் , அக்குழுக்களால் சில நேரங்களில் மோசமான விளைவுகள் உண்டாகின்றன.
பெண்களின் தலைமுடியை வெட்டும் நபர் என்ற சந்தேகத்தின்பேரில், தவறுதலாக 70 வயது முதியவர் ஒருவரை அவர்கள் கொன்றுள்ளனர். ஸ்ரீநகரில், ஒரு குழுவினரால் பிரிட்டீஷ் நாட்டுக்காரர் உள்பட ஆறு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மிரட்டப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதலில் ஈடுபட்டதாக அப்படி ஒரு குழுவால் சந்தேகிக்கப்பட்ட வசீம் அஹமத் கடுமையாகத் தாக்கப்பட்டார். தன்னை அவர்கள் உயிருடன் வைத்து எரிக்க முயன்றதாகவும், காவல் துறையினரால் தான் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.
மூன்று நாட்களில் இரண்டு முறை தனது மருமகளின் தலைமுடி வெட்டப்பட்டதால் தனது வீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளதாக, தன் பெயரை வெளியிட விரும்பாத முதியவர் ஒருவர் கூறினார்.