சென்னையில் மழைநீரில் மின்சாரம் பாய்ந்து இரண்டு குழந்தைகள் பலி!

சென்னையை அடுத்த கொடுங்கையூரில் தேங்கிக் கிடந்த மழை நீரில் அறுந்து கிடந்த மின் கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்ததால், இரண்டு சிறுமிகள் உயிரிழந்தனர். இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகள் மூன்று பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இறந்த சிறுமி

கொடுங்கையூர் ஆர். ஆர் நகரைச் சேர்ந்த பாவனா, யுவஸ்ரீ ஆகிய இருவரும் அருகில் உள்ள அரசுப் பள்ளிக்கூடத்தில் மூன்றாம் வகுப்புப் படித்துவந்தனர். மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டப் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால், இந்த இரு சிறுமிகளும் மற்றொரு சிறுமியுடன் சேர்ந்து மழை நீரில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு திறந்துகிடந்த மின் இணைப்புப் பெட்டிக்கு அருகில் சென்றபோது, அந்தப் பெட்டியிலிருந்து மின்சாரம் மழைநீரில் பாய்ந்தது தெரியாமல் அதில் காலை வைத்ததால் சிறுமிகள் இருவரும் தூக்கியெறியப்பட்டனர். மூன்றாவது சிறுமி உயிர் தப்பினார்.

தூக்கியெறியப்பட்ட சிறுமிகள் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக சிறுமிகளின் உடலை அளிக்க வேண்டுமென்றும் கோரினர்.

இறந்த குழந்தை

இந்த சம்பவத்தையடுத்து வியாசர்பாடி பகுதியின் மின்வாரிய செயற்பொறியாளர், உதவிசெயற்பொறியாளர் உள்ளிட்ட மூன்று மின்வாரிய அதிகாரிகள் உட்பட எட்டு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இறந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு தலை இரண்டு லட்ச ரூபாய் இழப்பீடு தருவதாக தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருக்கும் நடிகர் கமல்ஹாசன், “கொடுங்கையூரில் குழந்தைகளின் கொடுஞ்சாவிற்கு அனுதாபமும் நிதியுதவியும் அரசு செய்தால் போதாது. இனியும் நிகழாதிருக்க ஆவன செய்ய வேணடும்” என்று கூறியிருக்கிறார்.

கமல்

இந்த சம்பவம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸும் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். “அமெரிக்காவிலும், லண்டனிலும் செய்யப்பட்டதைவிட மிகச் சிறப்பாக மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி வெட்கமே இல்லாமல் கூறுகிறார்.”

மழை வெள்ளம்

“ஆனால், தலைநகர் சென்னையில் மின்சாரம் தாக்கி இரு சிறுமிகள் உயிரிழக்கின்றனர். மழைக்கால முன்னேற்பாடுகள் எதுவுமே செய்யப்படவில்லை என்பதை இந்த துயர நிகழ்வுகள் உறுதி செய்கின்றன,” என்று ராமதாஸ் கூறியிருக்கிறார்.

இந்த சம்பவத்தையடுத்து, சென்னையில் அமைந்துள்ள சுமார் 40 ஆயிரம் பில்லர் பாக்ஸ் எனப்படும் மின் இணைப்புப் பெட்டிகளை பரிசோதிக்க உத்தரவிடப்பட்டிருப்பதாக மின்துறை அமைச்சர் தங்கமணி கூறியிருக்கிறார்.