தமிழகத்தில் பணிபுரிந்துவந்த பயிற்சி ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், சென்னையில் தேர்வு மையத்தில் ப்ளூடூத் கருவியைப் பயன்படுத்தி விடைகளை எழுத உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டு அவரது மனைவி கைதாகியுள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த சபீர் கரீம்2015ல் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வு பெற்று, பயிற்சி முடித்த பின்னர், திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி மண்டலத்தில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்துள்ளார்.
ஐஏஎஸ் பணியைப் பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த திங்களன்று மீண்டும் யுபிஎஸ்சி தேர்வு எழுத சென்னையில் தேர்வுமையத்திற்கு வந்தஅவர், தனது சட்டையில் ப்ளுடூத் கேமரா, இயர்போன் கருவிகளை பொருத்திவந்துள்ளார் என்று கூறப்படுகிறது.
கடந்த திங்களன்று தேர்வு எழுத வந்த அவர், ஹைதராபாத்தில் உள்ள அவருடைய மனைவி ஜோய்சிக்கு கேள்விகளை ப்ளூடூத் கருவியில் ஸ்கேன் செய்து அனுப்பியதாகவும், பதில்களை அவர் உரக்கச் சொல்ல சபீர் எழுதியதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சபீர் திங்கள்கிழமை கைதான நிலையில், புதன்கிழமை (நவ.1) அவரது மனைவி ஹைதராபாத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு புழல் சிறையில் வைக்கப்பட்டுள்ளார் என்று எழும்பூர் காவல்நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருவர் மீதும் தகவல்தொழில்நுட்ப சட்டத்தின் 66வது பிரிவின்படி வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
எலெக்ட்ரானிக் சாதனங்களை ஸ்கேன் செய்வதற்காகவே வைக்கப்பட்டுள்ள மெட்டல் டிடெக்டார் கருவியில் சபீரின் ப்ளூடூத் கருவி சிக்காமல்போனாது எப்படி என்று விசாரணை செய்துவருவதாக எழும்பூர் காவல்நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.