சிறிலங்காவை, சீனாவின் முக்கியமான ஒரு பங்காளி என்று சீனாவின் உதவிப் பிரதமர் வாங் யாங் தெரிவித்துள்ளார். சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன நேற்று பீஜிங்கில் சீன உதவிப் பிரதமர் வாய் யாங்கை சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட சீன உதவிப் பிரதமர், “சிறிலங்காவுடனான உறவுகளை சீனா மிகவும் மதிக்கிறது.
ஆசியாவை ஐரோப்பா மற்றும் ஆபிரிக்காவுடன் இணைக்கும் பண்டைய பட்டுப்பாதை வணிகப் பாதை மற்றும் அதற்கு அப்பாலும் சென்று, வணிக மற்றும் உட்கட்டமைப்பு வலையமைப்பை உருவாக்கும் அணை மற்றும் நெடுஞ்சாலை முயற்சியின் ஒரு முக்கியமான பங்களாராகவே சிறிலங்காவை சீனா கருதுகிறது.
சிறிலங்கா உள்ளிட்ட வளரும் நாடுகளுடன் உறுதியான ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை சீனா எதிர்பார்க்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, சீனாவை ஒரு நெருங்கிய நண்பனாகவும், பங்காளியாகவுமே சிறிலங்கா கருதுகிறது.
21 ஆம் நூற்றாண்டு கடல்வழிப் பட்டுப்பாதைத் திட்டத்தில் பங்கேற்பதன் மூலம், துறைமுகங்கள், உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த முடியும் என்று நம்புகிறது” என்று கூறியுள்ளார்.
சுதந்திர வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திட ஆர்வம்
அதேவேளை, சீனாவுடன், சுதந்திர வர்த்தக உடன்பாட்டை கூடிய விரைவில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா ஆர்வமாக இருப்பதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம், பீஜிங்கில் நடந்த வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்பாட்டில் கூடிய விரைவில் கையெழுத்திடுவதில் சிறிலங்கா மிகவும் ஆர்வமாக இருக்கிறது. இதன் மூலம், இரண்டு நாடுகளுக்கும் கூடுதல் வணிக வாய்ப்புகள் கிடைக்கும்.
பொருளாதார வளர்ச்சியை நோக்கிய எமது பயணத்தில் சீனா நம்பகமான மற்றும் முக்கியமான பங்காளியாக இருந்துள்ளதுடன், அதன் அர்ப்பணிப்பு மற்றும் உதவியை சிறிலங்கா பாராட்டுகிறது.
எமக்குத் தேவையான நேரத்தில் உதவுகின்ற உண்மையான, நம்பகமான நண்பனாக சீனாவை சிறிலங்கா மதிக்கிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.