தெகிவளை சிறிலங்கா காவல் நிலைய புலனாய்வு அதிகாரி சுனில் தாப்ரு படுகொலை வழக்கில், விடுதலைப் புலிகளின் பிஸ்டல் குழுவைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினரான, செல்லத்துரை கிருபாகரனுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2003ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் நாள், தெகிவளை காவல் நிலைய புலனாய்வு பொறுப்பதிகாரியான சுனில் தாப்ரு, அவரது தங்குமிடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதையடுத்து தப்பிச் செல்ல முயன்ற முல்லைத்தீவைச் சேர்ந்த, செல்லத்துரை கிருபாகரன் என்ற விடுதலைப் புலிகளின் பிஸ்டல் குழு உறுப்பினரை, சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.
அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட மதன் எனப்படும் செல்லத்துரை கிருபாகரனுக்கு, வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், சட்டவிரோதமாக துப்பாக்கியை வைத்திருந்த குற்றத்துக்காக, 5ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், சட்டவிரோதமாக 5 ரவைகளை வைத்திருந்த குற்றத்துக்காக, 25 ஆயிரம் ரூபா அபராதம் செலுத்த வேண்டும் என்றும், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.