மாயமான கோவை வருமானவரித்துறை அதிகாரி கிருஷ்ணகிரியில் மீட்பு!

மாயமான கோவை வருமானவரித்துறை அதிகாரி பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.சிவக்குமார்

கோவையைச் சேர்ந்த செண்பகராமன் என்பவரின் மகன் சிவக்குமார் (38). இவர் கோவை வருமான வரித்துறை, தலைமையிட துணை ஆணையராக பணியாற்றி வருகிறார். கடந்த 2008-ம் ஆண்டு, ஐ.ஆர்.எஸ். தேர்ச்சி பெற்றவர். இவரது மனைவி ஸ்ரீதேவி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 13-ம் தேதி சிவக்குமார் திடீரென மாயமானார். குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், பீளமேடு போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
முதல் கட்ட விசாரணையில், 13-ம் தேதி அதிகாலை, 1.00 மணியளவில், சிவக்குமார் வீட்டில் இருந்து ஒரு சூட்கேசுடன் வெளியேறியது, அவர் குடியிருப்பில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அவரது மொபைல் போன், ஏ.டி.எம்., கார்டு உள்ளிட்ட அனைத்தையும் வீட்டில் வைத்துச்சென்றது தெரியவந்தது.
குடும்ப பிரச்னை காரணமாக, சிவக்குமார் வீட்டை விட்டு சென்றிருக்கலாம் என, கூறப்பட்ட நிலையில் சிவக்குமாரை தேடி தனிப்படை போலீஸார் கடந்த சில நாள்களுக்கு முன்பு கோவா சென்றனர்.  இந்நிலையில், மாயமான சிவக்குமார், கிருஷ்ணகிரியில் மீட்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ”அவர் மங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களுக்குச் சென்றுள்ளார். பின்னர், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் மிகவும், சோர்வான நிலையில் வந்தார். இதையடுத்து, அடையாளம் கண்டறியப்பட்டு, பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்” என்றனர்.