புதிய அரசியலமைப்பு தொடர்பாக பௌத்த பீடங்களின் மகாநாயகர்களுடனும், ஏனைய மதத் தலைவர்களுடனும், பரந்துபட்ட கலந்துரையாடல்களை அரசாங்கம் நடத்தவுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று மூன்றாவது நாளாக இடம்பெற்ற அரசியலமைப்பு பேரவையின் அமர்வில் உரையாற்றிய அவர்,
“நாங்கள் மகாநாயக்க தேரர்களையும், ஏனைய மதத் தலைவர்களையும், பொதுமக்களையும் சந்திக்கவுள்ளோம். நாங்கள் அரசியல் கட்சிகளுடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளோம் என்று சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார்.
தேசிய அளவிலான ஒருமித்த கருத்தை அடைய வேண்டும் என்பதே இதன் நோக்கம். புதிய அரசியலமைப்பை உருவாக்க யாரும் அவசரப்படவில்லை.
அடுத்த சிங்கள- தமிழ் புத்தாண்டுக்குள் அனைத்து விவாதங்களையும் முடிக்க முடியும்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உள்ளூராட்சித் தேர்தல் நேரத்தில், அரசியலமைப்பு கலந்துரையாடல்கள் இடைநிறுத்தப்படும்.
அரசியலமைப்பு தொடர்பாக கூட்டு எதிரணி முன்வைத்த பெரும்பாலான யோசனைகளுக்கு அரசாங்கம் இணங்கியுள்ளது.
ஒற்றையாட்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்கிறீர்கள். அதனை ஏற்கிறோம். மாகாணசபைகள் நாட்டைப் பிளவுபடுத்தக் கூடாது, பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், பிரதமரை நாடாளுமன்றத் தெரிவு செய்ய வேண்டும், எதிர்க்கட்சித் தலைவரை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்ய வேண்டும் என்கிறீர்கள். இவை எல்லாவற்றுக்கும் நாம் இணங்குகிறோம்.
மாகாணங்கள் ஒன்றிணைக்கக் கூடாது. மாகாணங்கள் ஒன்றிணைவதற்கான வாய்ப்பு இருத்தலும் கூடாது என்று வழிப்படுத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் கூட்டு எதிரணி யோசனை முன்வைத்திருக்கிறது.
நாட்டில் தற்போது 9 மாகாணங்கள் உள்ளனன. முழு நாட்டினதும் இணக்கமின்றி அதை பத்தாக அதிகரிக்கவோ அல்லது எட்டாக குறைக்கவோ முடியாது.
நாட்டிலுள்ள அனைத்து மக்களும் இணங்கினால் எம்மால் அதனை 15 ஆகவோ அல்லது 3 ஆகவோ மாற்றியமைக்க முடியும். மக்கள் இணக்கம் தெரிவித்தால் தான் நாம் அதை செய்ய முடியும்.
மாகாணங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதையோ குறைப்பதையோ மக்களே முடிவு செய்ய முடியும். அதனை நாடாளுமன்றத்தினால் பலவந்தமாக செய்ய முடியாது.
வடக்கு,கிழக்கு மாகாணங்களையோ அல்லது சப்ரகமுவ,வடமேல் மாகாணங்களையோ ஒன்றிணைக்க எம்மால் முடியாது .” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.