ராமநாதபுரத்தில் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் பறிமுதல்!

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில்  பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட  கடல் குதிரை உள்ளிட்ட 4 வகையான  கடல் வாழ் உயிரினங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

download (3)அருகி வரும் அரியவகை கடல் வாழ் உயிரினங்களான சுறா, கடல் குதிரை, கடல் பல்லி, சங்குகள் உள்ளிட்டவற்றை மீனவர்கள் பிடிப்பதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. ஆனால் இவற்றிற்கு வெளிநாடுகள் மற்றும் உள்ளூர் சந்தைகளில் நல்ல விலை கிடைப்பதால் சில மீனவர்கள் இவற்றை கள்ளத்தனமாக பிடித்து வந்து கடத்தலில் ஈடுபடுகின்றனர்.

கடல் குதிரை உள்ளிட்ட அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் பறிமுதல் இந்நிலையில் தொண்டி பகுதியில் கடல் வாழ் உயிரினங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, மத்திய வன உயிரின குற்றப் பிரிவு ஆய்வாளர் பிரதீப் தலைமையில் தொண்டியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில் காசிநாதன் என்பவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 கிலோ கடல் பல்லி, 5 கிலோ கடல் குதிரை, 17 கிலோ கடல் அட்டை, சங்குவின் சதை பகுதியான ஞானம் 12 கிலோ ஆகியன பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இவற்றை பறிமுதல் செய்த வன உயிரின பாதுகாவல் துறையினர், இது தொடர்பாக இரு நபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட இந்த கடல் வாழ் உயிரினங்களின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கலாம் என கூறப்படுகிறது.