சந்தேகமே வேண்டாம். வெள்ளத்தில் மிதக்கத் தொடங்கிவிட்டன எண்ணூர் மற்றும் வட சென்னைப் பகுதிகள். எண்ணூரின் துயரக் கதையையும், மழைத் தொடங்கிவிட்டால் ஏற்படப்போகும் பாதிப்புகள் பற்றியும் ஜூ.வி-யில் தொடர்ச்சியாக எழுதிவருகிறோம். ‘சென்னையை நீர்க்கல்லறையாக மாற்ற நினைக்கிறது தமிழக அரசு’ என்ற தலைப்பில் 2.8.17 தேதியிட்ட இதழிலும், ‘ஆற்றை மறிக்கும் அனல்மின் நிலையங்கள்… நீர்க்கல்லறையில் மூழ்கும் மக்கள்!’ என்ற தலைப்பில் 25.10.17 இதழிலும் அலசியிருக்கிறோம். இந்தப் பிரச்னையைத்தான், இப்போது கமலும் கையிலெடுத்திருக்கிறார். அதுவரையில் அலட்டிக் கொள்ளாமல் இருந்தவர்கள், கமல் களத்துக்கு வந்ததும் பரபரக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
பருவமழைத் தொடங்கிவிட்டது. பெரும் அச்சத்துடன் மழையைப் பார்க்கிறார்கள், எண்ணூர்வாசிகள். கமல்ஹாசனின் ட்விட்டர் பதிவும், அவரது அதிகாலை விசிட்டும், எண்ணூரைப் பற்றி மொத்த தமிழகத்தையும் பேசவைத்துள்ளது; குறட்டை விட்டுக்கொண்டிருந்த தமிழக அரசை, சற்று அசைத்துப் பார்த்திருக்கிறது. “எண்ணூரின் வெள்ள அபாயப் பகுதிகளில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” எனத் திருவள்ளூர் கலெக்டர் சுந்தரவல்லியைச் சொல்லவைத்துள்ளது. கமல்ஹாசனே களத்தில் இறங்கும் அளவுக்கு எண்ணூரில் என்ன பிரச்னை?
சென்னையின் வடக்கு முனையில், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின்கீழ் வருகிறது எண்ணூர். கடந்தாண்டு, கப்பலில் இருந்த எண்ணெய் கடலில் கொட்டியபோது, எண்ணூர் பேசுபொருள் ஆனது. எண்ணூர், மிகப்பெரிய பாதிப்புக்குள்ளானது. ஏற்கெனவே பாதிப்படைந்திருக்கும் எண்ணூர், இந்த வருடமோ, வெள்ளம், சாம்பல் கழிவுகள், கொசஸ்தலை ஆறு ஆக்கிரமிப்பு போன்ற விஷயங்களால் மேலும் ஆபத்தை எதிர் நோக்கியுள்ளது.
பெரும் அபாயகரமான பகுதிக்குள் நுழைவதுபோன்ற உணர்வை எண்ணூர் கொடுக்கிறது. வட சென்னை, வல்லூர் அனல்மின் நிலையங்களிலிருந்து புகைக் கூண்டுகளில் வெளியேறும் புகை, மேகங்களையே மறைக்கும். கடற்கரையையொட்டிய சாலையும், அதன் குறுக்கும் நெடுக்குமாகப் பாயும் குழாய்கள்தான், அனல்மின் நிலையங்களிலிருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகளை எடுத்துச் செல்கின்றன. அதில் ஆங்காங்கே உடைப்புகள் ஏற்பட்டு, சாம்பல் நீர், அங்கிருக்கும் நீர் நிலைகளில் கலக்கின்றன. இந்தக் குழாய்களுக்கு மிக அருகிலேயே, இந்துஸ்தான் மற்றும் பாரத் பெட்ரோலிய நிறுவனங்களிலிருந்து எடுத்துச் செல்லப்படும் எல்.பி.ஜி கேஸ் குழாய்களும் பாய்ந்துகொண்டிருக்கின்றன. இன்னும் தள்ளிப்போனால், காமராஜர் துறைமுகம். சாம்பல் கழிவுகள் எல்லாம் ஒரு குளமாகத் தேங்கிக்கிடக்க, அவை கொசஸ்தலை ஆற்றில் கலக்கின்றன.
ஒரு காலத்தில் உப்பளங்களால் நிறைந்திருந்த இடம், எண்ணூர். இன்றைக்கு உப்பளங்கள் இருந்த பகுதிகளில்தான், அரசின் நிறுவனங்கள் அமைந்திருக்கின்றன. மிக முக்கியமாக, கொசஸ்தலை ஆறு, ஆர்ப்பரித்து வந்து கடலில் கலக்கும் கழிமுகப் பகுதி முழுக்கவே அரசின் நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. மழைநீர் வடிந்துபோகக்கூடிய ‘பரவல்’ (Natural Flood Plain) முழுவதுமே இந்துஸ்தான் மற்றும் பாரத் பெட்ரோலிய நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. சிறு மழை பெய்தாலும்கூட, அந்தப் பகுதிகளில் பல நாள்கள் வடியாமல் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. கொசுக்கள் படையெடுப்பதால் மாலை ஆறு மணிக்கு மேல் வீட்டு ஜன்னலைக்கூட யாரும் திறப்பதில்லை. டெங்கு ஒழிப்பு நடவடிக்கை என நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் அரசாங்கம், இங்கு தன்னைத்தானே தண்டித்துக் கொள்ளுமோ?
சில மாதங்களுக்கு முன், துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய அரசிடம் அனுமதி கோரியது காமராஜர் துறைமுகம். ஏற்கெனவே, கொசஸ்தலையின் கழிமுகப் பகுதியைத் துறைமுகமே ஆக்கிரமித்திருக்கும் நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் எண்ணூர் பகுதியின் வரைபடத்தைக் கேட்டு வாங்கினார், சூழலியலாளர் நித்யானந்த் ஜெயராமன். தனக்குக் கிடைத்த வரைபடத்தை, 2009-ம் ஆண்டில் சூழலியலாளர் ஜேசு ரத்தினம் வாங்கியிருந்த வரைபடத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தபோது பெரும் அதிர்ச்சி. அதில் 16 கி.மீ நீளமுள்ள எண்ணூர் கடற்கழியை மொத்தமாகக் காணவில்லை. அதே சமயம், கடற்கழி இல்லாத இந்த வரைபடத்தை அடிப்படையாக வைத்து, துறைமுக விரிவாக்கத்துக்கு அனுமதியளித்தது, தமிழ்நாடு கடலோரப் பகுதி மேலாண்மை ஆணையம்.
கடற்கழி எப்படி மாயமானது? ‘‘1997-ல் எண்ணூர் பகுதியில் ஹைட்ரோகிராபர் (HydroGrapher) எனச் சொல்லப்படும் நீர்ப்பரப்பு வரையாளரைக் கொண்டு, இடத்தை அளந்து புது வரைபடம் வரையப்பட்டது. இதற்கு மத்திய அரசு அங்கீகாரமும் பெறப்பட்டது’’ என்று சொன்னார், தமிழ்நாடு கடலோரப் பகுதி மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர், டாக்டர் மல்லேஷப்பா. அடுத்து, ‘‘எதன் அடிப்படையில் இந்த வரைபடம் மாற்றியமைக்கப்பட்டது? எந்த ஹைட்ரோகிராபர் இதை ஆராய்ச்சி செய்தார்?’’ எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்விகளை எழுப்பினார் நித்யானந்த் ஜெயராமன். ‘மத்திய அரசு எந்த ஹைட்ரோகிராபரையும் அனுப்பவில்லை, புதிய வரைபடம் எதையும் அங்கீகரிக்கவில்லை’ எனச் சமீபத்தில் அவருக்குப் பதில் கிடைத்தது. அத்தனையும் பொய். எண்ணூருக்கு அக்டோபர் 28-ம் தேதி அதிகாலையில் கமல் வந்தார். தகவலறிந்து மக்களும், மீனவச் சங்க நிர்வாகிகளும் கூடிவிட்டனர். கொசஸ்தலை ஆறு முதலில் எவ்வளவு அகலத்தில் இருந்தது. மின் நிலையங்கள் வந்தபின் எப்படி சுருங்கியது என்பதையும் கமலிடம் விவரித்தார்கள். ஆற்றின் முகத்துவாரத்துக்கே சென்று கமல் பார்த்தார். சாம்பல் கழிவுகளைத் தாங்கிவரும் குழாய்கள் ஆங்காங்கே உடைபட்டிருந்தன. வெளியேறும் கழிவுகள் எப்படி ஆற்றில் கலக்கின்றன; சுற்றுப்புறத்துக்கு எப்படி தீங்கை ஏற்படுத்துகின்றன என்பதையும் மக்களிடம் கமல் கேட்டார். “இத்தனை வருஷமா சென்னையில் இருக்கிறேன். இங்க நிறைய ஃபேக்டரிகள் இருக்கும் எனத் தெரியும். ஆனால் இவ்ளோ மோசமான நிலையில் எண்ணூர் இருக்கும் என்பது தெரியாது” என்றார் கமல்.
எண்ணூர் மக்கள் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்; எத்தனையோ போராட்டங்களை நடத்தினர்; ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டன. எதற்குமே அசராத அரசு, கமல் களத்திற்கு சென்றவுடன் காலில் ஆசிட்டை ஊற்றிக் கொண்டதைப்போலக் கொதிக்கிறார்கள். கமலுக்குப் பதில் சொல்லும் விதமாக விமர்சனங்களை முன்வைக்கின்றனர். சென்னை இன்னும் ஒரு பேரழிவைச் சந்திக்காமல் இருக்க இப்போது தேவை விமர்சனங்கள் அல்ல; விமோசனம்தான்.