புது மனைவி சந்தேகம்; திரைப்படத்தால் வந்த வினை!

தனது கைபேசி இலக்கத்தை திரைப்படத்தில் பயன்படுத்தியதாகச் சித்தரித்த நடிகர் மீது, ஆட்டோ சாரதியொருவர் வழக்குப் பதிவுசெய்துள்ளார்.

பங்களாதேஷைச் சேர்ந்த இஜாஜுல் மியா என்பவர் ஆட்டோ சாரதி. இவரது கைபேசி இலக்கத்தை அந்நாட்டு உச்ச நட்சத்திரம் ஷகிப் கான் ஒரு திரைப்படத்தில் பயன்படுத்தியுள்ளார். 
Capturevஇதையடுத்து, நாளொன்றுக்கு சுமார் நூறு அழைப்புகள் வருவதாக அந்த கைபேசி இலக்கத்துக்குச் சொந்தக்காரரான மியா தெரிவித்துள்ளார்.

“நான் புதிதாகத் திருமணமானவன். நடிகர் ஷகிப் கான் என்று நினைத்துக்கொண்டு எனது கைபேசிக்கு தினந்தோறும் பல்வேறு அழைப்புகள் வருகின்றன. பெரும்பாலும் பெண் இரசிகைகளே அழைப்பை ஏற்படுத்துகிறார்கள். இதனால் எனது மனைவி என் மீது சந்தேகப் படுவதுடன், என்னை விட்டு விலகிச் செல்லப் போவதாகவும் மிரட்டுகிறார். எனது குடும்பத்தார் என்னை வீட்டுக்குள்ளேயே அனுமதிக்க மறுக்கிறார்கள். எனது வாடிக்கையாளர்கள் இந்த எண்ணையே பயன்படுத்துவதால் இந்த எண்ணை என்னால் மாற்றவும் முடியாது” என்று தெரிவித்திருக்கிறார் மியா.

மேலும், தனக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியத்துக்காக ஐந்து மில்லியன் டாகா (இலங்கை மதிப்பில் சுமார் ஒரு கோடி ரூபா) நட்ட ஈடாக வழங்க வேண்டும் என்றும் கோரி வழக்குப் பதிவு செய்திருக்கிறார்.

எனினும், இந்த வழக்கை ஏற்றுக்கொள்ள நீதிமன்றம் தயங்கிவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.