பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரி ஆகியவற்றை அறிமுகம் செய்து நாட்டின் பொருளாதார வளர்ச்சி சரிந்திருந்த நிலையில், எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வந்தன. இந்த நிலையில், உலக வங்கியின் அறிவிப்பானது மோடி அரசுக்கு பூஸ்ட் அளித்தார்போல் அமைந்துள்ளது.
கடந்த 2015-ம் வருடம் 142-ஆம் இடத்திலிருந்த இந்தியா, கடந்த ஆண்டு 130-ஆம் இடத்திற்கு உயர்ந்தது, இந்த ஆண்டு அதைவிட அதிரடியாக உயர்வு பெற்று 100-வது இடத்திற்கு ஏற்றம் கண்டுள்ளது.
இது குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
உலக நாடுகளில் சர்வதேச அளவில் எளிதாக தொழில் செய்யும் நாடுகள் பட்டியலை உலக வங்கி வௌியிட்டது. அதில் உலக அளவில் முதலீட்டாளர்களின் நலனைக் காத்தலில் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில், இந்தியாவில் எளிதாக தொழில்தொடங்க அனுமதி, அரசு வகையில் சிறந்த ஒத்துழைப்பு, கடன் எளிதாகக் கிடைத்தல், எளிதாக வரி செலுத்துதல், சிறுபான்மை முதலீட்டாளர்கள் நலனைக் காத்தல், ஒப்பந்த பணியை அதிகப்படுத்துதல், திவால் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது போன்ற காரணிகளால் இந்தியாவின் நிலை வெகுவாக உயர்ந்துள்ளது.
ஜிஎஸ்டி வரி விதிப்பு அறிமுகப்படுத்தி சில மாதங்களே ஆகி இருப்பதால், அடுத்த ஆண்டு அதன் தாக்கம் நல்லவிதமாக அமையும் என்று தெரிவித்தார்.
உலக அளவில் எளிதாக தொழில் செய்யும் நாடுகளில் முதல் இடத்தில் நியூசிலாந்தும், அதைத் தொடர்ந்து சிங்கப்பூர், டென்மார்க், தென் கொரியா, ஹாங்காங் நாடுகள் உள்ளன.
அதோடு அமெரிக்கா 6-வது இடத்திலும், இங்கிலாந்து 7-வது இடத்திலும் இருக்கின்றன. பிரிக்ஸ் நாடுகளைப் பொருத்தவரை ரஷியா 35-வது இடத்திலும், சீனா தொடர்ந்து 78-வது இடத்தில் இரண்டாவது ஆண்டாக நீடிக்கிறது.