தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிள்களில் பயணி;த்த சாரதிகளுக்கு எதிராக வவுனியா போக்குவரத்து பொலிஸார் இன்று அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு தலைக்கவசம் அணியாது சென்ற சாரதிகளுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை வவுனியா நகர்ப்பகுதியில் திடீர்சோதனைகளில் ஈடுபட்ட பொலிஸார், தலைக்கவசம் அணியாது பாடசாலைக்கு பிள்ளைகளை அழைத்துச் சென்றவர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன் வழக்கு பதிவு செய்வதற்கான பத்திரங்களையும் வழங்கியிருந்தனர்.
அத்துடன் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் தொடர்பாகவும் விளக்கம் அளித்திருந்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை வவுனியா மன்னார் பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் வர்த்தகர் சங்கம் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் வவுனியா மாவட்டத்தின் நகர்ப்புர போக்குவரத்து நடைமுறைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட நிலையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.