சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் பகுதியில் உருவாகும் பிரம்மபுத்ரா நதியை 1,000 கி.மீ., தூரம் சுரங்கம் அமைத்து தண்ணீர் கொண்டு செல்ல அந்நாட்டு பொறியாளர்கள், அரசிற்கு அறிக்கை அளித்துள்ளனர்.
பிரம்மபுத்திரா ஆறு, திபெத்திலுள்ள கயிலை மலையில் ஸாங்-போ என்ற பெயரில் புறப்பட்டு, இந்தியா மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளில் பாய்ந்து வங்காள விரிகுடாக் கடலில கலக்கின்றது.
மொத்தம் 2800 கிமீ நீளமுள்ள இந்த ஆறு, 1700 கிமீ தூரம் திபெத்திலுள்ள 4000 மீட்டருக்கும் அதிகமான மலைகளிலேயே கிழக்கு நோக்கி பயணிக்கிறது. பிறகு நாம்சா-படுவா மலையருகே, தெற்கு தென்மேற்காக வளைந்து அருணாசல பிரதேசத்தில் சியாங் என்ற பெயரில் நுழைந்து, அதன்பின் சமவெளிப் பகுதியை அடைகிறது.
சமவெளிப்பகுதியில் இந்நதி திகாங் என்று அழைக்கப்படுகிறது. சமவெளிப் பகுதியில் 35 கிமீ தொலைவு கடந்தபின், திபங் மற்றும் லோகித் என்ற ஆறுகளோடு கூடி மிகவும் அகன்ற ஆறாக ஆகி, பிரம்மபுத்திரா என்று பெயர் மாற்றமடைந்து அசாம் மாநிலத்தில் நுழைகிறது.