செவ்வாய்க் கிரகம் பற்றி ஆராய்வதற்கு 4.2 மில்லியன் அமெரிக்க டொலர்களை விஞ்ஞானிகளுக்கு வழங்குவதற்கு, பிரித்தானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்மூலம், புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள முடியும் எனவும் பிரித்தானியா நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் ஐக்கிய இராச்சிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ள பாரிய நிதியானது, விண்வெளி தொடர்பில் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள உதவும் என நம்புகிறோம். குறிப்பாக, செவ்வாய்க் கிரகத்தில் மனிதர் வாழக்கூடிய சூழல் தொடர்பில் ஆராய்வதற்கு, புதிய முயற்சிகளை மேற்கொள்ள முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரித்தானியாவின் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜோ ஜோன்சன் கருத்து வெளியிடும் போது ‘ஐக்கிய இராச்சிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் 17 அமைப்புகளுக்கு இந்த நிதியை பகிர்ந்தளிக்க எதிர்பார்த்துள்ளோம்.
நவீன தொழில்நுட்ப உலகை, விண்வெளி ஆராய்ச்சியின் ஊடாக வழிநடத்தக்கூடிய கட்டமைப்பை உருவாக்க வேண்டியுள்ளது. அதற்கான தருணம் எழுந்துள்ளதாகவே கருதுகிறேன்’ எனவும் தெரிவித்துள்ளார்.