தமிழர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என தந்தை செல்வா கூறியதனைப் போன்று அனைத்து இலங்கையர்களையும் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் கூறும் நிலையை ஏற்படுத்திவிட வேண்டாம் என அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு தொடர்பில் இன்றைய தினம் நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தின் போது கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும், புதிய அரசியலமைப்பு காரணமாக தமிழர்கள் மீண்டும் தனிநாடு, மற்றும் ஆயுதப் போரை ஆரம்பிப்பார்களா என்ற சந்தேகங்கள் சிங்கள மக்களிடத்தில் காணப்படுகின்றன.
அதேபோன்று தமிழ்மக்களும் இந்த நாடு முற்றுமுழுதான பௌத்த நாடாக மாற்றப்பட்டு விடுமோ என்ற அச்சத்தினைக் கொண்டுள்ளார்கள் இவை இரண்டும் நியாயமாக அச்சங்களே எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சம்பந்தன் தற்போது தனி நாடு என்பதனை விட்டு விட்டார் இது சிங்கள மக்களுக்கு அவர் கூறியுள்ள தற்செய்தியாகும் எனக் குறிப்பிட்ட மனோ கணேசன், முன்னாள் ஜனாதிபதி இதனை நன்றாக புரிந்து கொள்ளவேண்டும். அவர் மக்களை குழப்புவதை விட்டு விட்டு நல்லிணக்கத்தை நோக்கி பயணிக்க வேண்டும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.