பாகிஸ்தான் கடற்படையின், போர்க்கப்பல் ஒன்று நான்கு நாட்கள் பயணமாக, நாளை மறுநாள் கொழும்புத் துறைமுகத்துக்கு வரவுள்ளது. கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் நேற்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
பிஎஸ்என் சைய்ப் (PNS SAIF) என்ற, ஸ்வோர்ட் வகையைச் சேர்ந்த, சீனத் தயாரிப்பு போர்க்கப்பலே கொழும்புக்கு வரவுள்ளது.
சிறிலங்காவுடனான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில், நல்லெண்ணப் பயணமாக பாகிஸ்தான் போர்க்கப்பல் கொழும்பு வரவுள்ளதாக, பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் தரித்து நிற்கும் போது, சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து பயிற்சி, விளையாட்டு உள்ளிட்டவற்றில் பங்கேற்கும் என்றும், எதிர்வரும் 6ஆம் திகதி வரவேற்பு நிகழ்வு ஒன்றும் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியக் கடற்படையின் மூன்று போர்க்கப்பல்கள் நேற்று கொழும்பு துறைமுகத்துக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.