பிரித்தானிய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பல்கள் மற்றும் நீர் மூழ்கிக்கப்பல்களுக்கு உதிரிப்பாகங்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், பிற கப்பல்களில் இருந்து உதிரிப்பாகங்களை எடுக்கும் நெருக்கடி நிலைக்கு பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் பிற கப்பல்களில் இருந்து உதிரிப்பாகங்களை எடுப்பது 49 வீதத்தினால் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் நீர்மூழ்கிக் கப்பலுக்கான செலவீனங்கள் 5 மில்லியன் பவுண்டுகள் அதிகரித்துள்ளன.
தற்போது பிரித்தானியாவிடம் 19 போர்க்கப்பல்கள் மற்றும் ஏழு தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்கள் இருக்கின்ற நிலையில், சில நேரங்களில் அவை கடலுக்கு செல்லத் தேவையான உதிரிப்பாகங்கள் இருப்பதில்லை என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டில் பிற கப்பல்களில் இருந்து உதிரிப்பாகங்களை மாற்றிய 795 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நடவடிக்கையானது 2005ஆம் ஆண்டில் 30 தடவைகள் நடந்துள்ளன.
எனினும், கடந்த ஆண்டு மாதத்திற்கு 66 என்ற ரீதியில் பிற கப்பல்களில் இருந்து உதிரிப்பாகங்களை மாற்றும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாக தேசிய தணிக்கை அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
உதிரிப்பாகங்கள் பிரித்தெடுக்கப்படுகின்ற பிரச்சினையினால் தற்போது உற்பத்தியில் உள்ள நீர்மூழ்கி கப்பல்களின் உற்பத்தி செலவு சுமார் 40 மில்லியன் பவுண்டுகள் வரை அதிகரித்துள்ளது.
இதனை பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகமே அடையாளம் கண்டுள்ளதாக தணிக்கை அலுவலகம் கூறியுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.