உறுப்பு மாற்று அறுவைசிகிச்சைக்காகக் குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ‘புதிய பார்வை’ இதழின் ஆசிரியர் ம.நடராசன், நேற்று இரவு வீடு திரும்பினார்.
கடந்த செப்டம்பர் மாதம் 10-ம் தேதி மாலை, நடராசனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு மயக்கமடைந்தார். இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார்.
அவருக்குக் கல்லீரல் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஆரம்பத்தில், அவர் உடல்நிலை மோசமாக இருந்தது. அதையடுத்து, அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நடராசனுக்கு டிரைக்கியோடாமி பொருத்தப்பட்டது.
அதன்பிறகு நடந்த சோதனைகளில், அவருக்கு உடனடியாகக் கல்லீரல் மற்றும் சிறுநீரக உறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது. இதற்காக அவர் கடந்த பிப்ரவரி மாதம், உறுப்பு தானத் திட்டத்தின்கீழ் பதிவுசெய்து வைத்திருந்தார். ஆனால், அவருக்கு உறுப்புகள் கிடைப்பதில் சிக்கல் நீடித்தது.
இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதம், 4-ம் தேதி மூளைச்சாவு அடைந்த கார்த்திக் என்பவரின் உறுப்புகள், அன்று இரவே நடராசனுக்குப் பொருத்தப்பட்டன. நடராசனுக்கு கல்லீரல் தானம் பெற்றதில் மருத்துவ கவுன்சில் அறிவுறுத்திய விதிமுறைகள் காற்றில் பறக்கவிடப்பட்டதாக விமர்சனம் எழுந்தது.
நடராஜன்
இந்தநிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள நடராசனின் மனைவியும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியுமான சசிகலா 5 நாள்கள் பரோல் பெற்று (அக்டோபர் 7-ம் தேதி முதல் 11-ம் தேதிவரை) வெளியில் வந்து நடராசனைப் பார்த்துச் சென்றார்.
உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை முடிந்த பிறகும், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த நடராசன், உடல்நிலை சற்று குணமடைந்ததைத் தொடர்ந்து சில நாள்களுக்கு முன்பு சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.
இந்தநிலையில், பூரண குணமடைந்த நடராசனை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவமனை அனுமதி வழங்கியது.
ஆனால், நடராசனுக்குப் பெரிய அளவிலான உடலுறுப்பு மாற்றுச் சிகிச்சை முடிந்திருப்பதால் நோய்த்தொற்று இன்றி அவர் இருப்பதும், தீவிர கண்காணிப்பில் இருப்பதும் அவசியம் என மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியது.
இதனால் நடராசனை வழக்கமான அவரது பெசன்ட் நகர் வீடு அல்லது அவரது சகோதரர் ராமச்சந்திரன் வீடு இவற்றில் எங்கு தங்கவைத்தாலும் தொண்டர்கள் நலன்விரும்பிகள் அவரைக் காண வருவார்கள் என்பதால் இந்த இரண்டு இடங்களைத் தவிர்த்த ஒருவரது வீட்டில் நடராசன் தற்போது தங்கவைப்பதென முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து நேற்று இரவு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அவரை அந்த வீட்டுக்குக் கொண்டு சென்றனர்.
அவருடைய தம்பி ராமச்சந்திரன் பராமரிப்பில் வேறொரு வீட்டில் ரகசியமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். இன்னும்
2 மாதங்கள் அவர் முழுமையாக மருத்துவர்கள் கண்காணிப்பில் ஓய்வெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதால், இந்த ஏற்பாடு என்று சொல்லப்பட்டுள்ளது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுடன் நடராசன் தொலைபேசியில் பேசுகிறார்.
ஆனால், நோய்த் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர் யாரையும் தற்போது சந்திக்கவில்லை. உடல்நிலையும் மனநிலையும் சற்று தேறியபின் மீண்டும் அரசியல் களத்தில் நடராசன் சுறுசுறுப்பாகலாம் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.