யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனுக்கு இலங்கை இராணுவம் உயரிய அங்கீகாரம் கொடுத்து கௌரவித்துள்ளது.
இலங்கை இராணுவத்தின் “ரணவிரு” என்ற சஞ்சிகையில் நீதிபதி இளஞ்செழியன் குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டு, அவருக்கு உயரிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் தலைவர்கள் தொடர்பில் கூட இது வரையில் “ரணவிரு” சஞ்சிகையில் செய்திகள் வெளிவராத நிலையில், தமிழ் நீதிபதியான மா.இளஞ்செழியன் குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இது வரலாற்று சிறப்பம்சமாக பார்க்கப்படுகின்றது. அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனை முன்னாள் இராணுவ ஜெனரலும், பௌத்த தேரருமான புத்தன்கல ஆனந்த தேரர் சந்தித்து பேசியிருந்தார்.
இந்த சந்திப்பில் யாழ். படைகளின் கட்டளைத்தளபதி தர்ஷன ஹெட்டியாராச்சியும் கலந்துகொண்டிருந்தார்.இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்களுடன் கூடிய செய்தியினை ரணவிரு சஞ்சிகை அண்மையில் வெளியிட்டிருந்தது.
இலங்கை இராணுவத்தில் இருக்கும் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட படையினர் பெற்றுக்கொள்ளும் சஞ்சிகையில் தமிழர் ஒருவர் குறித்து செய்தி வெளியிடப்பட்ட முதல் சந்தரப்பம் இதுவாகும்.
கடந்த 2015ஆம் ஆண்டு விசுவமடுவில் இரண்டு தமிழ் யுவதிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் நான்கு இராணுவத்தினருக்கு நீதிபதி இளஞ்செழியன் 25 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தார்.
இவ்வாறான பின்னணியில் நீதிபதி இளஞ்செழியன் குறித்து இலங்கை இராணுவத்தின் “ரணவிரு” சஞ்சிகையில் செய்தி வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.