இணைந்த வடக்கு – கிழக்கில் கூட்டாட்சி அடிப்படையிலான தீர்வு வழங்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் கோரிக்கைளை நிராகரித்து மீண்டும் இரத்த ஆறு ஓடுவதற்கு வழிசெய்யாது சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்துங்கள்.
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
அரசமைப்பு நிர்ணய சபையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தமிழ் மக்களுக்கான தீர்வு வழங்கப்படாது ஏமாற்றப்பட்டால், தற்போது பரவலாக முன்னெடுக்கப்படும் ஜனநாயகப் போராட்டங்கள் உக்கிரமடைந்து ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கும் நிலைமைக்குச் செல்வதை யாரும் தடுக்க முடியாது.
மனித வாழ்க்கை சக்கரம் போன்று அரசியலும் நிலைமைகள் சக்கரமாக மாறிக் கொண்டு வருகின்றன. தந்தை செல்வா அன்று கூட்டாட்சி கோரினார். அதன் பின்னர் ஆட்சியாளர்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு கிழித்தெறியப்பட்டன.
கோரிக்கைகளை முன்வைத்து அகிம்சைப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டபோது எமது தலைவர்கள் நையப்புடைக்கப்பட்டனர்.
அகிம்சைப் போராட்டத்தை முடக்கிய போது தான் தந்தை செல்வா தமிழ் மக்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்று கூறினார்.
ஆயுத இயக்கங்கள் உருவாகின. ஆயுதப் போராட்டங்கள் வலுவடைகின்ற போது ஆளுகின்றவர்களின் மனநிலையிலும் மாற்றங்கள் ஏற்பட்டன.
அத்தகைய சந்தர்ப்பங்களில் சமாதான ஒப்பந்தம், பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டன. திம்பு முதல் பல பேச்சுக்களை ஆயுத இயக்கங்களை உள்ளடக்கி அரசாங்கம் முன்னெடுத்தன.
தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய இயக்கங்களுடன் பேச்சுக்களில் ஈடுபட்ட ஒருவர் தான் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ். அவர் தற்போது புதிய அரசமைப்புக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கின்றார்.
ஏன் இப்படி மாற்றமடைந்தீர்கள் என்று ஜி.எல்.பீரிஸிடம் செய்தியாளர் ஒருவர் வினாவினார். அதற்கு அவர், அப்போது ஆயுதப் போராட்டம் இருந்தது. அதன் காரணத்தால் அவ்வாறான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைமை இருந்தது.
அப்படியாயின் ஆயுதப் போராட்டம் இல்லாததன் காரணத்தினால் தமிழ் மக்களுக்கான உரிமைகளை வழங்க வேண்டிய அவசியம் இல்லையென்று கூறுவதற்கு முன்வருகின்றாரா? ஆயுதப் போராட்டம் மீண்டும் வர முடியாது என்று யாரும் ஆருடம் கூறிவிட முடியாது.
அன்று தந்தை செல்வாவின் நிலமைக்கு கூட்டமைப்பு தற்போது திரும்பியிருக்கின்றது. இதனால் தான் நான் அரசியல் சக்கரம் ஏற்பட்டுள்ளதாக ஆரம்பத்தில் கூறினேன்.
கூட்டமைப்பின் தலைவர் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் அரசுக்கு வெளியில் இருந்து கொண்டு முற்போக்கான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குகிறார்.
இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தை வலுவிழக்கும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன. அரசியல் தீர்வு வருமா என்ற சந்தேகம் எழும் வகையிலான செயற்பாடுகள் ஒவ்வொரு நாளும் முன்னெடுக்கப்படுகின்றன.
முற்போக்கு எண்ணத்துடன் நாட்டின் எதிர்காலம் தொடர்பாகச் சிந்தித்து செயற்படும் எமது தலைமையின் கோரிக்கையையும், விட்டுக்கொடுப்பையும் சரியாகப் புரிந்து கொள்ளாது புதிய அரசமைப்பு விடயத்தில் நாமும் எமது மக்களும் ஏமாற்றப்படுவோமாக இருந்தால் எமது தலைவர் வெறும் கையுடன் திரும்புவாராக இருந்தால் நிச்சயமாக பன்னாட்டுச் சமூகத்தின் நெருக்கடிக்குள் ஆட்சியாளர் முகம்கொடுக்க வேண்டிய துரதிர்ஷ்ட மான நிலமையொன்று ஏற்படும் என்றார்.