பெங்களூரு: நடன வகுப்புக்கு சரியாக வருவதில்லை என்று நடன ஆசிரியர் திட்டியதால் ஆறாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பெங்களூரு எலஹங்கா வட்டாரத்தில் அமைந்துள்ளது அட்டூர் லே அவுட் பகுதி. இங்கு வசிக்கும் குமார் மற்றும் ஜோதி தம்பதியினரின் மகள் சந்தனா (12). அங்குள்ள பள்ளி ஒன்றில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி.
அத்துடன் அங்குள்ள பத்ரிநாத் நடனப் பள்ளியில் தனியாக நடனம் பயின்று வருகிறார். இங்கு சதீஷ் (28) என்பவர் நடன ஆசிரியராக பணிபுரிந்துவருகிறார்.
சந்தனா சில நாட்களாக நடன வகுப்புக்கு சரியாக வருவதில்லையென்று கூறப்படுகிறது. இதன் காரணமாக சதீஷ் அவளைத் தொடர்ந்து மாணவர்கள் முன்னிலையில் திட்டி வந்ததாகவும் தெரிகிறது.
இந்நிலையில் நேற்று மாலை சந்தனா வழக்கம் போல நடன வகுப்புக்கு வந்த பொழுதும், சதீஷ் அவளைத் திட்டியிருக்கிறார். இதன் காரணமாக மனமுடைந்த சந்தனா தான் கையில் கொண்டு வந்திருந்த பள்ளிப் பையில் இருந்த விஷத்தை எடுத்து சாப்பிட்டு மயங்கி விழுந்திருக்கிறார்
இதனைக் கவனித்த சக மாணவர்கள் அளித்த தகவலின் பேரில் சந்தனா உடனடியாகி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். ஆனால் அவர் அங்கு இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
சந்தனாவின் உறவுகளால் கடுமையாகத் தாக்கப்பட்ட சதீஷை உள்ளூர் பகுதி மக்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். போலீசார் தற்பொழுது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.