பாகிஸ்தான் உருவாக காரணமாக இருந்த முகமது அலி ஜின்னாவின் மகள் தினா, நியூயார்க்கில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 98.
ஜின்னா மகள் தினா மரணம்
ஜின்னா, பாகிஸ்தானை உருவாக்கினாலும் அவரின் மகள் தினா பாகிஸ்தானுக்குச் சென்று வாழ விரும்பவில்லை.
மாறாக இந்தியரை திருமணம் செய்து கொண்டார். தினா வாடியாவின் கணவரின் பெயர் நெவிலி வாடியா. பாம்பே டையிங் நிறுவனத்தின் அதிபர். தினா, நெவிலி வாடியாவை திருமணம் செய்து கொண்டது பெரிய கதை!
1947-ம் ஆண்டு பாகிஸ்தான் பிரிந்தபோது, தினா தந்தையிடம் சென்று. ‘நெவிலியை காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறேன்’ எனக் கூற, ஜின்னாவுக்கோ கடும் அதிர்ச்சி.
பாகிஸ்தானை உருவாக்கிய சமயத்தில் மகள் பார்சி இனத்தவரை காதலித்து திருமணம் செய்தால், தன் இமேஜ் டேமேஜ் ஆகும் எனக் கருதினார்.
தினாவின் விருப்பத்துக்கு முட்டுக்கட்டை போட்டார். ‘லட்சக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் இருக்கிறார்கள்… அவர்களில் ஒருவரை நீ ஏன் திருமணம் செய்யக் கூடாது?’ என மகளிடம் ஜின்னா கேள்வி எழுப்பினார்.
மகளிடம் இருந்து சட்டென்று பதில் வந்தது. ‘லட்சக்கணக்கான முஸ்லிம் பெண்கள் இருக்க, நீங்கள் ஏன் பார்சி இனத்தைச் சேர்ந்த எங்கள் அம்மாவைத் திருமணம் செய்தீர்கள்’ என்று தினா பதிலடி கொடுத்தார். இப்போது, ஜின்னாவால் பதில் அளிக்க முடியவில்லை.
ஜின்னாவின் மனைவி, ரத்தன்பாய் பெடிட், டாடா குடும்பத்தைச் சேர்ந்தவர்.
42 வயது ஜின்னா,18 வயது ரத்தன்பாயை இஸ்லாம் மதத்துக்கு மாற்றி மரியம் என பெயர் சூட்டி மணமுடித்திருந்தார்.
தந்தை வழியிலேயே, தினா பார்சியான நெவிலியை மணந்து கொண்டார். ‘இனிமேல் உனக்கும் எனக்கும் எந்த உறவும் கிடையாது’ எனக் கொந்தளித்த ஜின்னா மகளுடனான உறவை முறிதத்தார்.
தந்தை, பாகிஸ்தானுக்குச் சென்ற் பின்னர், ஜின்னாவுக்கு தினா கடிதம் எழுதுவார். அதில், தன் பெயரைக் குறிப்பிடாமல் `மிஸஸ்.வாடியா’ என்று எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
1948-ம் ஆண்டு, ஜின்னாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. தந்தையை காண தினா விரும்பினார்.
பாகிஸ்தான் அவருக்கு விசா வழங்க மறுத்தது. ஜின்னா உயிருடன் இருந்தவரை, தினாவால் தந்தையைக் காண முடியவில்லை. ஜின்னாவின் இறப்புக்குத்தான் பாகிஸ்தானுக்கு அவரால் செல்ல முடிந்தது.
தினா வாடியா கடைசிக் காலத்தில் மும்பையில் தந்தை வாழ்ந்த ஜின்னா ஹவுஸில் வாழ விரும்பினார்.
2006-ம் ஆண்டு ஜின்னா ஹவுஸை பெற நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.
‘இந்து முறைப்படிதான் திருமணம் செய்துள்ளேன். என் மகன் மும்பையில் மிகப் பெரிய நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.
இந்து முறைப்படி, தாத்தாவின் சொத்து பேரனுக்குச் சொந்தம். எனவே ஜின்னா ஹவுஸை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்’ என மனுவில் கூறியிருந்தார்.
அதேவேளையில், 1968-ல் இயற்றப்பட்ட ‘The Enemy Property Act’ சட்டத்தில்,’ பாகிஸ்தானுக்கோ சீனாவுக்கோ வெளியேறிய இந்தியத் தலைவர்களின் சொத்துக்களை அவர்களது வாரிசுகள் யாரும் உரிமை கொண்டாட முடியாது’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால், தினாவுக்கு சாதகமானத் தீர்ப்பு கிடைக்கவில்லை.
பாம்பே ஹவுசில் வாழும் விருப்பம் நிறைவேறாமலேயே நியூயார்க்கில் நேற்று அவர் மரணம் அடைந்தார். நெவிலி- தினா தம்பதியின் மகன்தான் தற்போதையை பாம்பை டையிங் நிறுவனத்தின் தலைவர் நுஸ்லி வாடியா!