சிறிலங்காவில் மட்டுப்படுத்தப்பட்டளவு எரிபொருள் விநியோகமே மேற்கொள்ளப்பட்டு வருவதால், எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக நேற்று முதல் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சிறிலங்கா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு எரிபொருள் ஏற்றி வரும் கப்பல்களினால் ஏற்பட்டுள்ள தாமதத்தினால், எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை எரிபொருள் ஏற்றிய கப்பல் ஒன்று கொழும்பு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், வரும் செவ்வாய்க்கிழமை நிலைமைகள் சீரடையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
லங்கா ஐஓசி நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருள், தரக்குறைவாக இருந்ததால், அது நிராகரிக்கப்பட்டது. இதையடுத்தே, இந்த நெருக்கடி ஏற்பட்டதாக பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
சபுகஸ்கந்தவில் பெற்றோலியக் கூட்டுத்தாபன களஞ்சியத்தில் வரையறுக்கப்பட்டளவு எரிபொருளே கையிருப்பில் இருப்பதாகவும், இதுபோன்ற நிலைமைகள் ஏற்படாத வகையில் அரசாங்கம் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்றும், பெற்றோலியக் கூட்டுத்தாபன தொழிற்சங்க மூத்த அதிகாரி ராஜகருண தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் உள்ள 99 எரிபொருள் குதங்கள் ஐஓசி நிறுவனத்துக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள போதிலும், அவற்றில் 15 ஐ மாத்திரமே அந்த நிறுவனம் பயன்படுத்துகிறது. அவற்றை பெற்றோலியயக் கூட்டுத்தாபனம் பயன்படுத்துவதற்கும் அந்த நிறுவனம் அனுமதிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், நாடெங்கும் உள்ள எரிபொருள் விற்பனை நிலையங்களின் முன்பாக, நேற்று ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசையில் காத்திருந்தன.
இந்த நிலை அடுத்த சில நாட்களுக்குத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.