முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தனது விசாரணையை 3 மாதங்களில் நடத்தி முடித்து அறிக்கை சமர்ப்பிப்பார் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த விசாரணை கமிஷனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சென்னையை சேர்ந்த பி.ஏ. ஜோசப் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மனுவை தள்ளுபடி செய்தது. ஜெயலலிதா மரணம் தொடர்பான கமிஷனின் விசாரணை நேர்மையாக நடைபெறாது என்ற மனுதாரரின் குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இல்லை என கோர்ட்டு தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மாதம் 24-ந்தேதி மனுதாரர் பி.ஏ. ஜோசப் சார்பில் வக்கீல் சிவபாலமுருகன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் ‘‘மாநில அரசு இதுபோன்ற விசாரணை கமிஷன் அமைக்க வேண்டுமென்றால், அதனை சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்றி முடிவெடுக்க வேண்டும். ஆனால், ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைப்பதற்கு முன்பு சட்டசபையில் எந்த தீர்மானமும் நிறைவேற்றவில்லை. எனவே, தமிழக அரசு நியமித்துள்ள இந்த ஒருநபர் விசாரணை கமிஷன் சட்டப்படி செல்லுபடியாகாது.
ஏற்கனவே இதுபோன்ற வழக்கு ஒன்றில் அலகாபாத் ஐகோர்ட்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றாமல் விசாரணை கமிஷன் அமைத்தது தவறு என்று தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பு இதற்கும் பொருந்தும். மேலும் இதுபோன்ற விசாரணை கமிஷன் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியின் தலைமையில்தான் நடக்க வேண்டும்.
சுபாஷ் சந்திரபோஸ் மரணம் குறித்த விசாரணை கமிஷன் அமைத்தபோது என்ன வழிமுறைகள் பின்பற்றப்பட்டதோ அதே வழிமுறைகளை ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷனிலும் பின்பற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளதால் இந்த மனுவை விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் தனது விசாரணையை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.