மட்டக்களப்பில் பல்கலைக்கழ மாணவிகள் தங்கியிருந்த அறைக்குள் பிரவேசித்து அவர்களின் உடமைகளை கொள்ளையிட்டதாக தெரிவிக்கப்படும் சிறுவன் ஒருவருக்கு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதவானும், மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி பிணை வழங்கியுள்ளார்.
குறித்த சிறுவன் நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போhதே ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் குறித்த சிறுவனை விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு பகுதியில் கிழக்கு பல்கலைக்கழக மாணவிகள் தங்கியிருந்த அறைக்குள் பிரவேசித்து பணம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொள்ளையிட்ட சிறுவன் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.
கிழக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றும் மாணவிகள் சிலர் வீடொன்றினை வாடகைக்கு பெற்று தங்கியிருந்த நிலையில் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்றைய தினம் மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு சென்று தங்கிருந்த அறைக்கு வருகை தந்த போது தங்கியிருந்த வீட்டின் கூரையின் சில பகுதிகள் அகற்றப்பட்டிருப்பதனை அவதானித்துள்ளனர்.
உடனடியாக மாணவிகள் தங்களது உடமைகளை பரிசோதித்து பார்த்துள்ளனர்.
இதன்போது பணம் மடிக்கணினிகள், மற்றும் தொடுகை கையடக்க தொலைப்பேசிகள் ஆகின கொள்ளையிடப்பட்டிருப்பதனை அறிந்துக்கொண்டு அயலவர்களுக்கு அறிவித்துள்ளனர்.
அயல்வர்களின் உதவியுடன் காவல் நிலையத்தில் மாணவிகள் முறைப்பாடு செய்துள்ளனர்.
மாணவிகளின் முறைப்பாடுகளை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணைகளை தொடர்ந்து அப்பகுதியில் வசிக்கும் 13 வயதுடைய சிறுவன் ஒருவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து கொள்ளையிடப்பட்ட பொருட்கள் பல்வேறு பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே சிறுவனுக்கு நீதிமன்றம் பிணை வழங்கி விடுதலை செய்துள்ளது.