தமிழ் தலைவர்கள் தனிநாட்டுக் கனவில் இருக்காமல் அரசுடன் இணைந்து நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் சேவை செய்ய முன்வர வேண்டும் இவ்வாறு அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
ஜாதிக ஹெல உறுமயவின் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மாகாணசபை முறைமையில் திருத்தங்கள் மேற்கொள்வதன் ஊடாக தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும் என்பதை நாம் நம்ப மாட்டோம்.
இலங்கையிலுள்ள தமிழர்களில் 45 சதவீதத்தினர் வடக்கில் இருக்கின்றனர். எஞ்சிய 55 சதவீதத்தினரும் வடக்குக்கு வெளியில் தான் இருக்கின்றனர்.
வடக்குக்கு அதிகாரம் வழங்குவதன் ஊடாக எப்படி தமிழ் மக்களின் பிரச்சினை தீரும்.
1977ஆம் ஆண்டு இவர்கள் புதிய திட்டத்தை ஏற்படுத்தினார்கள். தமிழ் பேசும் மக்கள் என்று முஸ்லிம்களையும் இணைத்துக் கொண்டார்கள்.
முஸ்லிம்களை இணைத்துக் கொண்டாலும் வடக்கில் தமிழ் பேசும் மக்கள் 20 சதவீதம் தான். எஞ்சிய 80 சதவீதத்தினரும் வடக்குக்கு வெளியில் தான் இருக்கின்றனர்.
இந்தியாவின் தமிழ்நாட்டுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். இந்தியாவிலுள்ள தமிழர்களின் 94 சதவீதத்தினர் தமிழ்நாட்டில் தான் இருக்கின்றனர். இலங்கையில் அப்படியான நிலைமை இல்லை.
நாங்கள் இரண்டு தீர்மானங்களை முன்வைத்துள்ளோம். பிரதேச சபைகளுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். வடக்கில் இருக்கும் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களுக்கும் நன்மை கிடைக்கும்.
தெற்கில் இருக்கும் தமிழ் முஸ்லிம் சிங்கள மக்களும் நன்மை கிடைக்கும். அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை.
சிங்கப்பூரில் இருக்கும் படித்த அரசியல் தமிழ்த் தலைவர்களால் அந்த நாட்டுக்கு பெரிய சேவை வழங்கப்படுகின்றது. எமது நாட்டுக்கும் அந்தச் சேவை தேவையாகும். தமிழ் மக்களுக்கும் அந்தச் சேவை தேவையாக இருக்கின்றது.
தமிழ் தலைவர்கள் தனிநாட்டுக் கனவில் இருக்காமல் அவர்கள் நேரடியாக அரசுடன் இணைந்து கொண்டு அவர்களின் திறமைகளை நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் வழங்க முன்வர வேண்டும் என்றார்.