மனுஸ் அகதிகளை நியூசிலாந்தில் குடியமர்த்துவதற்கான வாய்ப்பை நிராகரித்தது ஆஸ்திரேலியா!

பப்புவா நியூ கினியிலுள்ள மனுஸ்தீவு தடுப்பு முகாம் மூடப்பட்டதைத் தொடர்ந்து, அங்குள்ள 600 க்கும் மேற்பட்ட அகதிகள் குறித்த முகாமிலிருந்து வெளியேற மறுத்து போராட்டம் நடத்திவருகின்ற நிலையில், இவர்களை நியூசிலாந்தில் குடியமர்த்துவதற்கான சலுகையை ஏற்றுக்கொள்ள பிரதமர் Malcolm Turnbull மறுத்துள்ளார்.

e01efa899fd74e65802a395ddb9d8f6e-fa1f32c4972c47c2871503b3e1a2df7e-0நியூசிலாந்து பிரதமராக பொறுப்பேற்றதன் பின், தனது முதலாவது உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு, இன்று சிட்னி வந்த Jacinda Ardern, பிரதமர் Malcolm Turnbull -உடன் மனுஸ் அகதிகள் விடயம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.

கடந்த 2013ம் ஆண்டு நியூசிலாந்து பிரதமராக இருந்த John Key, ஆஸ்திரேலிய அரசு விரும்பினால், வருடமொன்றுக்கு தடுப்பு முகாம்களிலுள்ள 150 அகதிகளை தமது நாடு ஏற்றுக்கொள்ளத் தயார் என அறிவித்திருந்த நிலையில், இச்சலுகை இன்னமும் நடைமுறையில் இருப்பதாகவும், ஆஸ்திரேலியா இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் நியூசிலாந்து பிரதமர் Jacinda Ardern  இன்றைய சந்திப்பின்போது தெரிவித்திருந்தார்.

எனினும் முன்னரைப்போலவே இச்சலுகையை மறுத்துள்ள பிரதமர், தற்போதைக்கு இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது எனவும், படகு மூலம் வந்தவர்களை நியூசிலாந்தில் குடியமர்த்தினால் ஆட்கடத்தல்காரர்கள் தமது வியாபாரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அது வழிகோலும் எனவும் தமது முடிவினை நியாயப்படுத்தியுள்ளார்.