ஐ.எஸ். தீவிரவாதிகள் ஈராக்கிய மொசூல் நகரில் மோதல்கள் இடம்பெற்ற போது குறைந்தது 741 பொதுமக்களை மரணதண்டனையை ஒத்த தண்டனையை நிறைவேற்றிக் கொன்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கிறது.
ஈராக்கிற்கான ஐக்கிய நாடுகள் உதவித் திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலயம் என்பவற்றால் நேற்று முன்தினம் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
மொசூல் நகரிலான மோதலின் போது அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற மக்களை கடத்திச் சென்று மனிதக் கேடயங்களாக பிடித்துவைத்திருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் அவர்களில் பலரை கொன்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தலைவர் ஸெய்த் ராத் ஹுஸைன் கூறினார். அதேசமயம் மேற்படி மோதலின் போது ஈராக்கிய படையினரால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் குறித்தும் விசாரணையை முன்னெடுக்க அவர் அழைப்பு விடுத்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை இடம்பெற்ற கடுமையான மோதலின் போது ஈராக்கிய இராணுவத்தினதும் அமெரிக்கா .தலைமையிலான படையினரதும் வான் தாக்குதல்களில் மேலும் 461 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை, அந்தப் பிராந்தியத்திலான இராணுவ நடவடிக்கைகளின் போது மொத்தம் 2,521 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 1,673 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கிறது.