தடயவியல் சோதனை உறுதியானது… தலைமையை தேர்ந்தெடுப்பதிலேயே தலைபோகும் மோசடி!

கடந்த ஜூன் மாதம் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 முதன்மை தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரணைக்கு ஆணையிட வேண்டும் மேலும் தேர்வினை ரத்து செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய முதல் தொகுதி(Group1) பணிகளுக்கான முதன்மைத் தேர்வுகளின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக ஆதாரத்துடன் செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் 19 துணை ஆட்சியர்கள், 26 காவல் துணை கண்காணிப்பாளர்கள், 21 வணிக வரித்துறை உதவி ஆணையர்கள், 8 மாவட்டப் பதிவாளர்கள் என 74 முதல் தொகுதி பதவிகளுக்கான முதனிலைத் தேர்வுகள் 2015ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி நடத்தப்பட்டன.

அத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றோருக்கு கடந்த ஆண்டு ஜூலை 29, 30 ஆகிய தேதிகளில் முதன்மைத் தேர்வுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியது.

அதில், தகுதியும், திறமையும் இல்லாத சிலரின் விடைத்தாள்கள் மாற்றப்பட்டு மோசடி செய்யப்பட்டிருக்கிறது.

இதற்காக சிலரிடமிருந்து ரூ. 1 கோடி வரை கையூட்டு பெறப்பட்டிருப்பதாக குற்றச்சாற்று எழுந்துள்ளது. நேர்காணலில் கூடுதல் மதிப்பெண் வழங்குவதற்கான பேரங்களும் நடைபெற்று வருவதாகவும், இதற்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த தேர்வில் பங்கேற்றவர்களின் உண்மையான விடைத்தாள் என்று கூறி, அதைக்காட்டி தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

அந்த விடைத்தாள்கள் போலியானவை. அதுகுறித்து சென்னை காவல் ஆணையரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிமன்றம் ,‘‘தேர்வு எழுதியவர்களின் உண்மையான விடைத்தாள் தன்னிடம் உள்ளது என்று தொலைக்காட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஒரு தேர்வு என்றால், ஒரு விடைத்தாள் தானே இருக்க முடியும்? அது எப்படி 2 விதமான விடைத்தாள்கள் உள்ளன? போலீஸாரின் புலன் விசாரணையில்தான் உண்மை வெளியே வரும் என்று கூறியிருந்தது.

இதனை தொடர்ந்து மதுரையைச் சேர்ந்த திருநங்கை ஸ்வப்னா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில்,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு 68 பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட குரூப்-1 தேர்வில் முறைகேடு நடந்துள்ளது. எனவே, இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்னிலையில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கில் சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் செய்தி வெளியிட்ட தொலைக்காட்சி நிறுவனத்தை எதிர்மனுதாரராக சேர்க்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தேர்வாணையம் மற்றும் தனியார் தொலைக்காட்சி தரப்பில் விடைத்தாள்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 விடைத்தாள் வெளியான புகார் மீதான விசாரணைக்கு தேர்வாணையம் போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என சென்னை குற்றப்பிரிவு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில், தொலைக்காட்சியில் வெளியான விடைத்தாளும், டி.என்.பி.எஸ்.சி கொடுத்த விடைத்தாளும் ஒரே மாதிரியானதாகவும், ஒரே இயந்திரத்தில் அச்சடிக்கப்பட்டதும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, குரூப்-1 தேர்வு மூலம் கடந்த 2015ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர் மற்றும் பின்னணி விவரங்களை இன்னும் ஏன் தாக்கல் செய்யவில்லை என தேர்வாணையத்துக்கு கேள்வி எழுப்பியதுடன், தேர்வானவர்களின் பட்டியலை நவம்பர் 8 ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

ஒரு மாவட்ட ஆட்சியரை உருவாக்கும் தேர்விலேயே இந்த அளவுக்கு மோசடி நிகழ்ந்திருப்பது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.