அரசியலில் அபூர்வ சகோதரர்கள்; ஆரம்பமாகிறது கமல் – விஜய் கூட்டணி

நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீசான படம்தான் மெர்சல். இந்தப் படம் பலருக்கும் மெர்சலை ஏற்படுத்தி இருக்கிறது என்பதுதான் உண்மை.

குறிப்பாக ஜி.எஸ்.டி குறித்து விஜய் பேசும் வசனமும் பண மதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக காமெடி நடிகர் வடிவேலு கிண்டலடிக்கும் வகையிலான காட்சியும் பா.ஜ.க.வினருக்கு மெர்சலை ஏற்படுத்தியது.

kamal1xxஉடனே அந்தக் காட்சிகளைப் படத்திலிருந்து நீக்க வேண்டும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தினார்.

இதையடுத்துப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நடிகர் விஜய்க்கு ஆதரவாகப் பேட்டி கொடுக்கத் தொடங்கினர். கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை நெறிக்கப்படுவதாகப் பலரும் குற்றம் சாட்டினர்.

இப்படத்துக்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்தவர் கமல். பிறகு ஒட்டுமொத்தத் திரையுலகமும் விஜய்க்கு ஆதரவாகக் களத்தில் குதித்தது.

ஆனால் ரஜினி இதுபற்றி வாய் திறக்கவே இல்லை. காரணம் பற்றி விசாரித்ததில் அவரும் இந்த விடயத்தில் மெர்சலாகி விட்டாராம்.

அதாவது, புதிய கட்சி ஆரம்பிக்கும் முடிவில் இருக்கும் ரஜினி பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்கும் திட்டத்தில் இருக்கிறாராம்.

இந்த சமயத்தில் மத்திய அரசுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து மேலிட அதிருப்தியைச் சம்பாதிக்க அவர் விரும்பவில்லையாம். அதனால்தான்  மெர்சல் படம் குறித்து  எந்தக் கருத்தையும்   தெரிவிக்காமலிருந்த போதிலும் தனது டுவிட்டர் பக்கத்தில், மெர்சல் படத்தில் முக்கிய பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது வெல்டன் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் என்று பட்டும் படாமலும் ஒரு கருத்தைத் தெரிவித்தார்.

ஆனால், கமலோ தனது டுவிட்டரில் ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டதுடன், விஜய்யைப் பாராட்டி மெர்சலை மெச்சியுமிருந்தார்.

விஜய்யும் கமலின் வீட்டுக்குச் சென்று தன் நன்றியைத் தெரிவித்தார். விஜய்யின் மெர்சல் படத்தின் கதையும் கமலின் அபூர்வ சகோதரர்கள் படக் கதையும் ஏறத்தாழ ஒரே மாதிரியானது என்பதை உணர்த்தவும், அரசியலில் தனக்கொரு கூட்டணி கிடைத்து விட்டதை  உறுதிப்படுத்தும் வகையிலும் தாங்கள்   இருவரும் அரசியலில் அபூர்வ சகோதரர்கள் என்பதை உலகுக்கு உணர்த்தவுமே தனது அபூர்வ சகோதரர்கள் படப் போஸ்டரின் முன்னால் நின்று விஜய்யுடன் கமல் போட்டோ எடுத்துக் கொண்டார் என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

புதிய கட்சி ஆரம்பிக்கும் திட்டத்தில் இருக்கும் கமல், அதற்கான அறிவிப்பைத் தனது பிறந்த நாளான நவம்பர் 7 ஆம் திகதி வெளியிடுகிறார்.

எனினும் அரசியலில் கூட்டணி அமைப்பதா? அல்லது தனித்துச் செயற்படுவதா? என்று பெரும் குழப்பத்தில் இருந்து வருகிறார். வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படம் தொடர்பாக டாக்டர்கள் போர்க்கொடி தூக்கிய போது, என்னைப் பணிய வைக்கிறார்கள்.

இன்னொரு வீரன் வருவான் என்று கமல் பேட்டி கொடுத்திருந்தார். இப்போது அந்த வீரன் கமலின் வலையில், தானாகவே வந்து சிக்கி இருக்கிறார். அவர்தான் விஜய்.

விஜய் அரசியலில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் வேளையில், விஜய் மூலம் இந்திய அளவில் ஏற்பட்டிருக்கும் அரசியல் பரபரப்பை விடுவாரா கமல்.

ஒரே அமுக்காக அமுக்கி விட்டார் என்கிறார்கள் விடயம் அறிந்தவர்கள். மெர்சல் படம் பார்த்து முடிந்ததும் சிறிது நேரம் கமலும் விஜய்யும் மனம் திறந்து பேசினார்களாம்.

அரசியல் பற்றித்தான் இருவரும் கதைத்திருக்கிறார்கள். தனது அரசியல் ஆசையை கமலுக்கு முன்பே வெளிப்படுத்தியவர் விஜய். கமலின் அரசியல் அவதாரத்தை வெளிப்படையாகவே விஜய் ஆதரித்தார் என்றும் சொல்லப்படுகிறது.

ஊழல் ஒழிப்பு, மக்களுக்கு அடிப்படை வசதிகள், கல்விப் பணியில் புதிய திட்டங்கள் போன்றவை பற்றி எல்லாம் கமலுடன் விஜய் ஆலோசனை செய்ததாகச் சொல்கிறார்கள்.

அரசியலில் நுழைந்து பொதுமக்களை விழிப்புணர்வு அடையச் செய்து, அரசியலில் நல்ல பாதையைக் காட்ட உங்களைப் போன்றவர்கள் வந்தால் நானும் துணை நிற்பேன் என்று விஜய் உறுதி அளித்திருக்கிறாராம்.

மேடைகளில் ரஜினி ரசிகன் என்று தன்னை விஜய் வெளிப்படுத்திக் கொள்வார்.

ஆனால் விஜய் சம்பந்தப்பட்ட பட புரமோஷன்களுக்குப் பலமுறை அழைப்பு விடுத்தும் ரஜினி கலந்து கொண்டதில்லை என்று கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு உண்டு.

ஆனால், கமலுடன் தனக்கு ஒரு கெமிஸ்ட்ரி இருக்கிறது என்பதையே கமல் – விஜய் சந்திப்பு உறுதிப்படுத்தி இருக்கிறது என்கிறது கோடம்பாக்கம்.