உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னர் மைத்திரி, ரணில் தலைமையிலான தேசிய அரசின் அமைச்சரவையில் அதிரடி மாற்றம் இடம்பெறவுள்ளது.
2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர் இந்த மாற்றம் இடம்பெறும் எனத் தெரியவருகின்றது.
பிணைமுறி மோசடி விசாரணை, உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல், தேசிய அரசுக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி உட்பட மேலும் சில காரணங்களாலேயே அரச தலைமை இந்த முடிவை எடுத்துள்ளது என ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் ஜனவரி 27ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பிணைமுறி மோசடி தொடர்பிலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகுவதால் அரசு மீது மக்கள் அதிருப்தியடையும் நிலை உருவாகியுள்ளது.
குறிப்பாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமும் நேரடியாக சாட்சியம் பெறுவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கான அழைப்பையும் அந்தக் குழு விடுத்துள்ளது.
இதன்படி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் விரைவில் ஆஜராகுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி முடிவை பிரதமர் எடுப்பதற்கு முன்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கடந்த செவ்வாயன்று மனம்விட்டு பேசியுள்ளார் என்றும், சுமார் 4 மணிநேரம் வரை இந்தச் சந்திப்பு நீடித்தது எனவும் அறியமுடிகின்றது.
இதன்போது, சாட்சியமளிக்கச் செல்வதற்கு முன்னர் பிரதமர் பதவியை தற்காலிகமாக இராஜிநாமா செய்யுமாறும், அவ்வாறில்லாவிட்டால் விசாரணையின் சுயாதீனத்தன்மை மீது சந்தேகம் எழும் என்றும் பிரதமருக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, விசாரணையின் பின்னர் பதவி இழக்க வேண்டிவரின் அது தர்மசங்கடமாக அமையும் என்பதாலேயே முன்கூட்டியே பதவியைத் துறக்குமாறு கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்மைய பிரதமர் தனது பதவியைத் துறந்த பின்னரே ஜனாதிபதி அதிரடி மாற்றங்களைச் செய்யவுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க இவ்வாறு பிரதமர் பதவியைத் துறந்துவிட்டால் அமைச்சரவை தாமாகவே கலைந்துவிடும்.
அதன்பின்னர் சிங்கள, பௌத்த மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்ற ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதி பிரதமராகத் தெரிவுசெய்து, புதிய அமைச்சரவையை ஏற்படுத்துவார் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரதமர் பதவியை ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்காவிட்டால் அரசியல் நெருக்கடி ஏற்படும் என்பதாலேயே அக்கட்சிக்கே நாடாளுமன்றத்தில் உயர் பதவிகள் இரண்டும் வழங்கப்படவுள்ளன.
அதேவேளை, பிரதமர் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்தினால் மஹிந்த அணியான பொது எதிரணி பக்கமுள்ள எம்.பிக்கள் சிலரது ஆதரவைப் பெறமுடியும் என்றும், அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வெற்றிக்கு உதவியாக அமையும் என்றும் சு.க. பக்கமுள்ள சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டரசின் 2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
அதன்பின்னர் விவாதம் ஆரம்பமாகி டிசம்பர் 9ஆம் திகதி இறுதி வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.