இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர் சிலர் இன்று முல்லைதீவு நகரப் பகுதியில் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் அங்கு அசாதாரண நிலை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் முல்லைதீவு – மூலக்கிளை தெரிவு கூட்டம் ஒன்று இன்று முல்லைதீவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
குறித்த கூட்டத்திற்கு தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உள்ளிட்ட பலர் வருகை தந்துள்ளனர்.
ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில் அந்த கூட்டம் காலை ஆரம்பமாகி 12.30 மணியளவில் நிறைவு பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித்த கட்சி உறுப்பினர்கள் முல்லைதீவு நகர்ப்பகுதியில் ஒருவரை ஒருவர் தாக்கி மோதல் ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் கட்சி உறுப்பினர் சிலரிடம் வினவியபோது,
நடைபெற்று முடிந்த கூட்டத்தில் கட்சி உறுப்பினர்களின் சில மோசடி தொடர்பில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சம்மந்தப்பட்ட நபர்களே தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இந்த கட்சியின் ஏனைய உறுப்பினர்களின் தலையீட்டின் மூலம் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.