‘கார்ட்டூனிஸ்ட்’ பாலா கைதின்போது என்ன நடந்தது?

கார்ட்டூனிஸ்ட் பாலா, cartoonist bala

படம் வரைந்தால் கைது, ஃபேஸ்புக்கில் கருத்து பதிவிட்டால் கைது, பத்திரிகையில் எழுதினால் கைது, அரசை விமர்சித்தால் கைது என தமிழக மக்களின் காதுகளில் அதிகம் விழும் வார்த்தையாக மாறியிருக்கிறது ‘கைது’. பேச்சு சுதந்திரத்துக்கும் கருத்து சுதந்திரத்துக்கும் நேரடி சவால்கள் நீக்கமற நிறைந்திருக்கும் காலகட்டம் இது.
இந்தச் சூழலில்…

கார்ட்டூனிஸ்ட் பாலா, cartoonist bala

சில நாள்களுக்கு முன்பு கந்துவட்டிக் கொடுமையால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தீக்குளித்தனர். ‘கந்துவட்டிக் கும்பலால் தாங்கள் கடும் இன்னலுக்கு ஆளாகிறோம்’, என நெல்லை காசிதர்மம் பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்து தொடர் புகார்கள் அளித்துள்ளார். மாவட்ட ஆட்சியரிடம் புகார் தந்தும் நடவடிக்கை எடுக்காததால் மனமுடைந்த அவர், தனது மனைவி முத்துலட்சுமி மற்று இரண்டு குழந்தைகளுடன் தீக்குளித்தார். சிகிச்சை பலனளிக்காமல் நான்கு பேரும் இறந்தனர். ஆட்சியர் அலுவலக வளாகத்தில்  கரிக்கட்களாக அவர்கள் கிடந்த காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தத் துயர சம்பவம் தொடர்பாக ‘கார்ட்டூனிஸ்ட்’ பாலா, கார்ட்டூன் ஒன்றை வெளியிட்டிருந்தார். முதல்வர், நெல்லை ஆட்சியர், நெல்லை போலீஸ் கமிஷனர் மூவரும் தங்கள் நிர்வாணத்தை பணக்கட்டுகளை வைத்து மறைத்து நிற்பது மாதிரியும், கீழே தீயில் கருகிய குழந்தை கிடப்பது மாதிரியுமான அந்த கார்ட்டூன் பெரும் சலசலப்பை உண்டாக்கியது.

கார்ட்டூனிஸ்ட் பாலா, cartoonist bala

‘இந்த கார்ட்டூனை ஆத்திரத்தின் உச்சத்தில்தான் வரைந்தேன்’, என கார்ட்டூனிஸ்ட் பாலா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த கார்ட்டூன் தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, நேல்லை போலீஸில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், சென்னை போரூர் அருகேயுள்ள பெரிய பணிச்சேரியில் இருக்கும் ‘கார்ட்டூனிஸ்ட் பாலா வீட்டுக்கு ஐந்து போலீஸார் மஃப்டியில் வந்துள்ளனர். அதில் ஒருவர் பெண் போலீஸ். பாலாவின் மனைவி சாந்தினி, வந்திருந்த போலீஸாரின் அடையாள அட்டையையும், கைது வாரன்ட்டையும் காண்பிக்கும்படி கேட்டிருக்கிறார். அதற்கு அவர்கள் மறுத்துள்ளனர்.

நெல்லைக் குற்றப்பிரிவு போலீஸார் எனக்கூறிய அவர்கள், பாலா மற்றும் அவரது மனைவி சாந்தினியின் செல்ஃபோன்களை பிடுங்கி வைத்துள்ளனர். பின்னர், பாலாவை தங்களுடன் வருமாறு பலவந்தமாக இழுத்துள்ளனர். ‘முறையான ஆவணங்களை காட்டுங்கள்’, என பாலா கேட்கவே வாக்குவாதம் முற்றியிருக்கிறது. ஒருகட்டத்தில் வீட்டுக்குள் இருந்த பாலாவை தரதரவென வெளியே இழுத்துவந்த போலீஸார், அவரைக் கைதுசெய்து அழைத்து சென்றிருக்கின்றனர். TN 72 G 1100 என்ற வெள்ளை போலீஸ் வேனில் பாலா கைது செய்து அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். இதைபார்த்த பாலாவின் மனைவி சாந்தினியும், இரண்டு குழந்தைகளும் அலறி, அருகில்இருப்பவர்களை அழைத்திருக்கின்றனர். அதற்குள், பாலாவை எங்கு கூட்டிப்போகிறோம் என்பதை குடும்பத்தாரிடம் தெரிவிக்காமல் போலீஸ் வாகனம் அங்கிருந்து பறந்திருக்கிறது. நெல்லை செல்வதற்கு 10 மணி நேரத்துக்கு மேலாக ஆகும். நள்ளிரவில் பாலா மாவட்ட மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர் படுத்தப்படுவாரா, அல்லது போலீஸ் காவலில் வைக்கப்படுவாரா என்பது இனிதான் தெரியும். கார்ட்டூனிஸ்ட் பாலா, இப்போது ‘லைன்ஸ்மீடியா (linesmedia.in) ’ என்ற இணைய ஊடகத்தை நிர்வகித்து வருகிறார்.